வீடு ஒதுக்கீடு ஆணை வழங்குவதற்காக ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளர் கைது

வீடு ஒதுக்கீடு ஆணை வழங்குவதற்காக ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-12-05 22:30 GMT
ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் அட்கோ பகுதியில் வசித்து வருபவர் மோகனா(வயது 38). இவர் ஓசூர் அருகே சூளகிரி ஆரம்ப சுகாதார நிலையத்தில், பல் டாக்டராக பணி புரிந்து வருகிறார். மேலும், வீட்டின் அருகே கிளினிக் நடத்தி வருகிறார். இவரது கணவர் சுகுமாரன். இவர், நெல்லையில் உள்ள மருத்துவ கல்லூரியில், சித்த மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், டாக்டர் மோகனா, ஓசூர், பாகலூர் அட்கோ அருகில் உள்ள பிருந்தாவன் நகரில், ரூ.55 லட்சம் மதிப்பிலான வீடு ஒன்றை, வீட்டு வசதி வாரியத்தின் மூலம் வாங்கினார். இதற்கான முழு தொகையையும் வங்கி மூலம் கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பே செலுத்தியுள்ளார்.

ஆனால் இதுநாள் வரையிலும் வீடு ஒதுக்கப்பட்டதற்கான ஆணை மற்றும் வீட்டு சாவி அவரிடம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது சம்பந்தமாக வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் அண்ணாமலை(52) என்ற இளநிலை உதவியாளர், வீடு ஒதுக்கீடு ஆணை வழங்குவதற்காக 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.

இது தொடர்பாக டாக்டர் மோகனா, கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், அவர்களின் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை, மோகனா, அண்ணாமலையிடம் வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அண்ணாமலையை கையும், களவுமாக பிடித்து, கைது செய்தனர்.

மேலும் செய்திகள்