தூத்துக்குடியில் மாமனாரை கொலை செய்த மருமகன் கைது

தூத்துக்குடியில் மாமனாரை கழுத்தை நெரித்து கொலை செய்த மருமகனை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Update: 2018-12-05 21:30 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் மாமனாரை கழுத்தை நெரித்து கொலை செய்த மருமகனை போலீசார் நேற்று கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சுமைதூக்கும் தொழிலாளி

தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள பாக்கியநாதன்விளையை சேர்ந்தவர் செந்தூர்பாண்டி. இவருடைய மகன் மாரிமுத்து (வயது 52). சுமைதூக்கும் தொழிலாளி. இவருடைய மகள் மாரியம்மாள், தனது கணவர் விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த சுப்பையா மகன் காளிராஜ்(43) என்பவருடன் விக்கிரமசிங்கபுரத்தில் வசித்து வந்தார். காளிராஜ் அங்கு உள்ள ஒரு மீன்கடையில் வேலைபார்த்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு மாரியம்மாள் தூத்துக்குடியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.

கொலை

இதனால் அவரை அழைத்து செல்வதற்காக நேற்று முன்தினம் காளிராஜ் வந்தார். அப்போது, காளிராஜிக்கும், மாமனார் மாரிமுத்துவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த காளிராஜ், மாரிமுத்தை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டார்.

இதுகுறித்து தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்ககிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து தப்பி சென்ற காளிராஜை நேற்று போலீசார் கைது செய்தனர். காளிராஜிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் போலீசில் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

மறுப்பு

கடந்த 15 நாட்களுக்கு முன்பு மனைவி மாரியம்மாள் தூத்துக்குடியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். இதனால் அவரை அழைத்து செல்வதற்காக மாமனார் மாரிமுத்து வீட்டுக்கு வந்தேன். அங்கு மாமனார் மட்டும் வீட்டில் இருந்தார். அவர் என்னுடன் மாரியம்மாளை அனுப்ப மறுத்தார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மாமனார் மாரிமுத்தை தள்ளிவிட்டேன். கீழே விழுந்தவரின் தலையில் அங்கு கிடந்த சிறிய இரும்பு ஆணி குத்தி ரத்தம் வந்தது. இதனால் அருகில் கிடந்த ரிப்பனை எடுத்து, கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு தப்பி சென்றேன். ஆனால் போலீசார் என்னை கைது செய்து விட்டனர் என்று தெரிவித்து உள்ளார்.இதைத் தொடர்ந்து காளிராஜை போலீசார் தூத்துக்குடி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்