தூத்துக்குடி அருகே பிடிபட்ட கடல் அட்டைகளை இலங்கைக்கு கடத்த திட்டமிட்ட 3 பேர் கைது வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை
தூத்துக்குடி அருகே நேற்று முன்தினம் பிடிபட்ட கடல் அட்டைகளை இலங்கைக்கு கடத்த திட்டமிட்டு இருந்த 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி அருகே நேற்று முன்தினம் பிடிபட்ட கடல் அட்டைகளை இலங்கைக்கு கடத்த திட்டமிட்டு இருந்த 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
கண்காணிப்பு
மருத்துவகுணம் வாய்ந்த கடல் அட்டைகள் வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக கடத்தப்பட்டு வருகிறது. இதனால் கடல் அட்டைகள் அதிக அளவில் பிடிக்கப்பட்டு வந்தது. வேகமாக அழிந்து வந்ததால், இந்த கடல் அட்டைகளை பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடல் அட்டை
இந்த நிலையில் தூத்துக்குடி அருகே உள்ள கீழஅரசடியில் உள்ள கிட்டங்கியில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனச்சரக அலுவலர் ரகுவரனுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் வனத்துறையினர் நேற்று முன்தினம் இரவு அந்த கிட்டங்கிக்கு சென்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு ஏராளமான சாக்கு மூட்டைகளில் கடல் அட்டைகள் பதப்படுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
அதே போன்று சில கடல் அட்டைகள் பாத்திரங்களில் வைத்து அவிக்கப்பட்ட நிலையிலும் இருந்தன. இதில் மொத்தம் 1½ டன் கடல் அட்டைகள் இருந்தன. இதன் மதிப்பு பல லட்சம் என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து வனத்துறையினர் கடல் அட்டை மற்றும் லோடு ஆட்டோ, கடல் அட்டையை அவிக்க பயன்படுத்திய பாத்திரங்கள், எடை எந்திரம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.
3 பேர் கைது
இது தொடர்பாக வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து, கடல் அட்டையை பதுக்கியதாக தூத்துக்குடி ஜெய்லானி தெருவை சேர்ந்த முகமதுகான் மகன் மைதீன்(வயது 23), தாளமுத்துநகர் அப்துல்காதர் மகன் நாகூர் முகைதீன்(21), புளியமரத்தரசடி அருணாசலம்(67) ஆகிய 3 பேரை கைது செய்தனர். விசாரணையில், இந்த கடல் அட்டைகளை இலங்கைக்கு கடத்த அந்த 3பேரும் திட்டமிட்டு இருந்தது என தெரிய வந்தது. அவர்கள் 3 பேரும் நேற்று தூத்துக்குடி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு பிஸ்மிதா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
தடை செய்யப்பட்ட...
இது குறித்து வனத்துறை அலுவலர் கூறியதாவது:- கடல் அட்டை போன்ற தடை செய்யப்பட்ட கடல் வாழ் உயிரினங்களை மீனவர்கள் பிடிக்க கூடாது.
இது போன்ற தடை செய்யப்பட்ட உயிரினங்களை கடத்தினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. ஆகையால் தடை செய்யப்பட்ட உயிரினங்களை யாரும் பிடிக்க வேண்டாம். மேலும் இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் மக்கள் வனத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.