தாம்பரத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நகராட்சி நிர்வாக ஆணையர் ஆய்வு

தாம்பரத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து நகராட்சி நிர்வாக ஆணையர் ஆய்வு செய்தார்.

Update: 2018-12-05 22:30 GMT
தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரம் நகராட்சி பகுதியில் 39 வார்டுகளிலும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக தாம்பரம் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தம் 30 இடங்கள் தேர்வுசெய்யப்பட்டது.

அதில் முதல் கட்டமாக கிழக்கு தாம்பரம் ராஜா அய்யர் தெருவில் உள்ள சேலையூர் நகராட்சிமேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தனியார் நிறுவனம் மூலம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இங்கு 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு கேன் தண்ணீர் ரூ.7 என்ற வீதத்தில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் வினியோகிக்கப்படுகிறது.

இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ் ஆய்வு செய்தார். அப்போது குடிநீர் வினியோகம் செய்ததில் நகராட்சிக்கு செலுத்தவேண்டிய தொகைக்கான காசோலையை தனியார் நிறுவனத்தினர் அவரிடம் வழங்கினர். 

பின்னர் தாம்பரம் நகராட்சி பகுதியில் செயல்பட்டுவரும் பசுமை உரக்கிடங்குகளையும் அவர் ஆய்வு செய்தார். அவருடன் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் இளங்கோவன், மண்டல பொறியாளர் முருகேசன், நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, பொறியாளர் ரவிச்சந்திரன், சுகாதார அலுவலர் அறிவுசெல்வம், உதவி பொறியாளர் நளினி மற்றும் அதிகாரிகள் உடன் வந்தனர்.

மேலும் செய்திகள்