பாளையங்கோட்டை அருகே பயங்கரம் 2½ வயது குழந்தை கொலை கொடூர தாய் கைது

பாளையங்கோட்டை அருகே 2½ வயது குழந்தையை கொன்ற கொடூர தாய் கைது செய்யப்பட்டார்.;

Update: 2018-12-05 22:00 GMT
நெல்லை,

பாளையங்கோட்டை  அருகே 2½ வயது குழந்தையை கொன்ற கொடூர தாய் கைது செய்யப்பட்டார்.

கணவரை பிரிந்தார்

பாளையங்கோட்டை அருகே உள்ள மேலப்பாட்டத்தை சேர்ந்தவர் காசி. விவசாயி. இவருடைய மகள் மகாராசி (வயது 27). இவருக்கும், சென்னையை சேர்ந்த நாராயணன் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும் கணவன், மனைவி இருவரும் சென்னைக்கு சென்று விட்டனர். இவர்களுக்கு 2½ வயதில் சிவமகேசுவரி என்ற பெண் குழந்தை இருந்தது.

இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மகாராசி கோபித்துக்கொண்டு மேலப்பாட்டத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். இரு குடும்பத்தினரும் கணவன், மனைவியை சமாதானம் செய்து வைத்தும், இருவரும் சமாதானம் ஆகவில்லை. இதனால் மகாராசி, மனவேதனையில் இருந்து வந்தார்.

குழந்தை கொலை

இந்த நிலையில் நேற்று காலையில் குழந்தை சிவமகேசுவரி வீட்டு திண்ணையில் பிணமாக கிடந்தாள். இதை பார்த்த மகாராசியின் தாய் சந்திரா, தனது பேத்தி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். பின்னர் மகாராசியை தேடியபோது அவரை காணவில்லை. அவரை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரகுபதிராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மகாராசியை தேடினார்கள்.

தற்கொலை முடிவு

அப்போது அங்குள்ள காட்டுப்பகுதியில் மகாராசி கீழே படுத்து அழுதுகொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அந்த இடத்திற்கு சென்று மகாராசியை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், மகாராசி தனது கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த விரக்தியில் குழந்தையை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். அதன்படி நேற்று காலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது குழந்தைக்கு அரளிவிதையை அரைத்து கொடுத்து உள்ளார். இதனால் குழந்தை வாந்தி எடுத்து அழுது உள்ளது. அந்த குழந்தையை தூக்கிக்கொண்டு வெளியே சென்றுவிட்டு குழந்தை இறந்ததும் வீட்டின் திண்ணையில் கிடத்திவிட்டு காட்டுப்பகுதிக்கு சென்று விஷத்தை குடித்து தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அப்போது ஊர் மக்கள் அவரை பார்த்து விட்டதால் மகாராசி தற்கொலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது தெரியவந்து உள்ளது.

தாய் கைது

உடனே போலீசார் மகாராசியை கைது செய்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கணவரை பிரிந்து வாழ்ந்த விரக்தியில் 2½ வயது குழந்தையை கொலை செய்த கொடூர தாய் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்