கோத்தகிரி அருகே: செல்போன் கோபுரம் அமைப்பதை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம்
கோத்தகிரி அருகே செல்போன் கோபுரம் அமைப்பதை எதிர்த்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே கேர்பெட்டாவில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு கடந்த ஏப்ரல் மாதம் 2-ந் தேதி குடியிருப்புகளுக்கு நடுவே தனியார் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தொடங்கியது. இதை அறிந்த பொதுமக்கள் உடனடியாக பணிகளை தடுத்து நிறுத்தினர்.
மேலும் செல்போன் கோபுரம் அமைத்தால் கதிர்வீச்சு காரணமாக சுற்றுச்சூழல் மற்றும் மனிதர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்படும், எனவே வேறு இடத்தில் அதனை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து அந்த பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. அதன்பிறகு கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி மற்றும் நவம்பர் 24-ந் தேதி ஆகிய 2 நாட்கள் மீண்டும் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தொடங்கியது. அப்போதும் பொதுமக்கள் பணிகளை தடுத்து நிறுத்தி எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து பலமுறை அதிகாரிகள் முன்னிலையில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன. சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் செல்போன் கோபுர பணிகளை நாளை(வெள்ளிக்கிழமை) வரை நிறுத்தி வைக்குமாறு தனியார் நிறுவனத்தை அதிகாரிகள் அறிவுறுத்தியதாக தெரிகிறது. இதற்கிடையில் செல்போன் கோபுரம் அமைக்கும் இடத்துக்கு செல்லும் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாதபடி பெரிய கற்களை பொதுமக்கள் அடுக்கி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று அந்த கற்களை அப்புறப்படுத்தி, செல்போன் கோபுரத்துக்கு பொருத்த ஜெனரேட்டரை சரக்கு வாகனம் மூலம் கொண்டு சென்று, அங்கு பணியாளர்கள் இறக்கி வைத்துள்ளனர்.
இதை அறிந்த பொதுமக்கள் அந்த சரக்கு வாகனத்தை சிறைபிடித்ததுடன், அதன் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் செல்போன் கோபுரம் அமைத்தால் ஊரை காலி செய்வோம், அடையாள அட்டைகளை அரசிடம் திரும்ப ஒப்படைப்போம் என்று கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதையடுத்து சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
பின்னர் கோத்தகிரி வருவாய் ஆய்வாளர் பூவேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் அபிராமி மற்றும் போலீஸ் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது செல்போன் கோபுரம் அமைக்க ஊருக்கு ஒதுக்குப்புறமாக பகுதியில் இடம் தருவதாகவும், உடனடியாக ஜெனரேட்டரை திரும்ப எடுத்து செல்ல வேண்டும் எனவும் பொதுமக்கள் கூறினர். இதையடுத்து தனியார் செல்போன் நிறுவன பணியாளர்கள் ஜெனரேட்டரை மீண்டும் சரக்கு வாகனத்தில் ஏற்றி திரும்ப கொண்டு சென்றனர். அதன்பிறகு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.