அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் ‘திடீர்’ விரிசல் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்

அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட ‘திடீர்’ விரிசலால் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.

Update: 2018-12-05 22:15 GMT
அரக்கோணம், 

அரக்கோணத்தில் இருந்து காட்பாடி செல்லும் ரெயில் மார்க்கத்தில் ரெயில்வே சிப்பந்திகள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அன்வர்திகான்பேட்டை - மகேந்திரவாடி ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று காலை 5.30 மணி அளவில் பணியில் இருந்த போது தண்டவாளத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டு இருப்பதை சிப்பந்திகள் கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து அரக்கோணம் ரெயில் நிலைய அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ரெயில் நிலைய மேலாளர் ராதாகிருஷ்ணன், பொறியாளர் பங்கஜகுமார், ரெயில்வே போக்குவரத்து கட்டுப்பாட்டு அலுவலர், பொறியாளர்கள், ஊழியர்கள், சிப்பந்திகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று தண்டவாள விரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் காலை 8.30 மணி அளவில் தண்டவாள விரிசல் சரிசெய்யப்பட்டது. இதன் காரணமாக சென்னையில் இருந்து கோவை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ், பீகார் மாநிலம் மிஷாபபூரில் இருந்து யஸ்வந்த்பூருக்கு செல்லும் யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ், தன்பாத்தில் இருந்து கேரளா மாநிலம் ஆலப்புழைக்கு செல்லும் தன்பாத் எக்ஸ்பிரஸ், சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் டபுள் டெக்கர் விரைவு ரெயில், அரக்கோணத்தில் இருந்து பெங்களூரு செல்லும் பயணிகள் ரெயில் ஆகியவை ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டு 1 மணி நேரம் காலதாமதத்திற்கு பின்னர் ஒவ்வொன்றாக சென்றது.

எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர். தண்டவாள விரிசல் குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்