பரோலில் சென்று தலைமறைவான ஆயுள் தண்டனை கைதி 7 மாதங்களுக்கு பிறகு சிக்கினார்
வேலூர் மத்திய சிறையில் இருந்து பரோலில் சென்று தலைமறைவான ஆயுள்தண்டனை கைதி 7 மாதங்களுக்கு பிறகு போலீசில் சிக்கினார்.;
வேலூர்,
வேலூர் மத்திய சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என 800-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் பரோலில் சொந்த ஊர்களுக்கு சென்று வருகிறார்கள். பரோலில் செல்லும் கைதிகள் குறிப்பிட்ட நாட்களில் மீண்டும் மத்திய சிறைக்கு திரும்பி விடுவார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பாப்பாஜி (வயது 43) என்பவரை 2002-ம் ஆண்டு கொலை வழக்கு ஒன்றில் மத்திகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு கடந்த 2008-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் பாப்பாஜி கடந்த ஏப்ரல் மாதம் 6 நாள் பரோலில் ஊருக்கு சென்றார். பரோல் முடிந்து அவர் திரும்பிவராமல் தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் தலைமறைவான பாப்பாஜி பெங்களூருவில் பதுங்கியிருப்பதாக வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் பெங்களூரு சென்று விசாரணை நடத்தி அங்கு பதுங்கியிருந்த பாப்பாஜியை கைது செய்தனர்.
பின்னர் வேலூருக்கு அழைத்துவரப்பட்டு மீண்டும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவான அவர் 7 மாதங்களுக்கு பிறகு போலீசில் சிக்கியிருக்கிறார்.