ஆரேகாலனி காட்டுத் தீ குறித்து விசாரணை நடத்த வேண்டும் சுற்றுச்சூழல் மந்திரி வலியுறுத்தல்
ஆரேகாலனி காட்டுத்தீ குறித்து விசாரணை நடத்த வேண்டும் என சுற்றுச்சூழல் துறை மந்திரி ராம்தாஸ் கதம் வலியுறுத்தி உள்ளார்.
மும்பை,
ஆரேகாலனி காட்டுத்தீ குறித்து விசாரணை நடத்த வேண்டும் என சுற்றுச்சூழல் துறை மந்திரி ராம்தாஸ் கதம் வலியுறுத்தி உள்ளார்.
பயங்கர காட்டுத் தீ
மும்பையில், போரிவிலியில் இருந்து ஆரேகாலனி வரை சுமார் 16 கி.மீ. சுற்றளவிற்கு அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்கு சிறுத்தைப்புலி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இதேபோல வனப்பகுதியில் 12 மலைவாழ் கிராமங்களும் உள்ளன. மேலும் பல இடங்களில் வனப்பகுதியையொட்டி குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இந்தநிலையில், நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் கோரேகாவ் கிழக்கு, ஐ.டி. பார்க் பின்புறம் உள்ள வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. மேலும் தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.
தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டு இருந்த காட்டு தீயை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தனர். இதையடுத்து அவர்கள் உடனடி யாக யாக வனப்பகுதியையொட்டி இருந்த குடியிருப்புகளுக்கு தீ பரவாமல் தடுத்தனர்.
வனவிலங்குகள் உயிரிழப்பு?
எனினும் நேற்று முன்தினம் இரவில் தீ வனப்பகுதியில் சுமார் 4 கி.மீ.க்கு பரவி இருந்தது. நேற்று காலை தீயணைப்பு துறையினர், வனத்துறையினர் மற்றும் 100 தன்னார்வ தொண்டர்களின் உதவியுடன் போராடி காட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என தீயணைப்பு துறையினர் கூறியுள்ளனர். எனினும் வனவிலங்குகள் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணை
இந்தநிலையில், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த வேண்டும் என மாநில சுற்றுச்சூழல் துறை மந்திரி ராம்தாஸ் கதம் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘ஆரேகாலனி தீ விபத்தில் சுமார் 60 ஏக்கர் வனப்பகுதி அழிந்து உள்ளது. எனவே இது விபத்தா அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்ட சதிச்செயலா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து வனத்துறை கட்டாயமாக விசாரணை நடத்த வேண்டும். இந்த பிரச்சினையை வனத்துறை மந்திரி சுதீர் முங்கண்டிவாரிடம் எழுப்ப உள்ளேன்’’ என்றார்.