தேன்கனிக்கோட்டையில், வனத்துறையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தேன்கனிக்கோட்டையில் வனத்துறையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2018-12-04 22:45 GMT
தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள வனச்சரக அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. யானைகளின் அட்டகாசத்தை தடுக்க தவறியதாக வனத்துறையை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளரும், தளி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டி.ராமச்சந்திரன் தலைமை தாங்கி பேசினார். பகுதி செயலாளர் பூதட்டியப்பா முன்னிலை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பேசுகையில், கர்நாடக மாநிலத்தில் இருந்து தேவர்பெட்டா வழியாக தளி மற்றும் ஜவளகிரி வனப்பகுதிக்குள் 200-க்கும் மேற்பட்ட யானைகள் வந்துள்ளன. இவை கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாய பயிர்களை தினமும் நாசம் செய்து வருகின்றன. இந்த யானைகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த தவறிய வனத்துறையை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

யானைகள் ஊருக்குள் வராதவாறு அகழிகள் வெட்டிட வேண்டும். பயிர் சேதங்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும். கர்நாடகாவில் இருந்து வந்த யானைகளை மீண்டும் அங்குள்ள வனப்பகுதிக்கே விரட்டி அடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓசூர், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் யானைகள் தாக்கி 2 பேர் காயம் அடைந்துள்ளனர். யானைகளால் மனித உயிர்கள் சேதம் ஏற்படாமல் இருக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி னர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில விவசாய சங்க துணை செயலாளர் லகுமய்யா, மகளிர் அணி துணை தலைவி சுந்தரவள்ளி, மாநில குழு உறுப்பினர் நஞ்சப்பா, மாவட்ட தலைவர் சின்னசாமி, நகர செயலாளர் சலாம் பேக், மாநில குழு உறுப்பினர் ஜெயராமரெட்டி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் நாகராஜ் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட விவசாய சங்க தலைவர் பழனி நன்றி கூறினார்.


மேலும் செய்திகள்