ஆபரேஷன் தாமரை விவகாரம் எங்கள் கட்சிக்கு வருபவர்களை வேண்டாம் என சொல்ல நாங்கள் சன்னியாசிகளா? ஈசுவரப்பா கேள்வி

எங்கள் கட்சிக்கு வருபவர்களை வேண்டாம் என சொல்ல நாங்கள் சன்னியாசிகளா? என்று ஈசுவரப்பா கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2018-12-04 21:45 GMT
பெங்களூரு, 

எங்கள் கட்சிக்கு வருபவர்களை வேண்டாம் என சொல்ல நாங்கள் சன்னியாசிகளா? என்று ஈசுவரப்பா கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்நாடக பா.ஜனதா மூத்த தலைவர் ஈசுவரப்பா நேற்று ராய்ச்சூரில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நாங்கள் சன்னியாசிகளா?

ஆபரேஷன் தாமரை மூலம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயற்சி செய்வதாக முதல்-மந்திரி குமாரசாமியும், காங்கிரசாரும் குற்றம்சாட்டுகின்றனர். எங்கள் கட்சிக்கு வருபவர்களை வேண்டாம் என்று சொல்வதற்கு நாங்கள் என்ன சன்னியாசிகளா?. காங்கிரசை சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு செல்ல உள்ளதாக சதீஷ் ஜார்கிகோளி எம்.எல்.ஏ. கூறி இருக்கிறார்.

அவர் மீது மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் நடவடிக்கை எடுக்கட்டும். காங்கிரசில் மந்திரி பதவி கிடைக்காதவர்கள், பா.ஜனதாவுக்கு செல்வதாக கூறி தங்களின் வேலையை செய்து கொள்கிறார்கள். நாங்கள் ஆபரேஷன் தாமரையை கையில் எடுக்கவில்லை. எங்கள் கட்சிக்கு வருபவர்களை வேண்டாம் என்று சொல்ல மாட்டோம்.

மக்களுக்கு சந்தேகம்

காங்கிரசில் அதிருப்தி உள்ளது, இந்த கூட்டணி ஆட்சி இன்னும் செயல்பட தொடங்கவில்லை என்று சதீஷ் ஜார்கிகோளி எம்.எல்.ஏ. சொல்கிறார். கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி செயல்படுகிறதா? இல்லையா? என்பதில் மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. முதல்-மந்திரி யார்?, மந்திரிகள் யார்?், கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவர் யார்? என்று மக்களுக்கு தெரியவில்லை.

அரசு செயல்படாததால் வளர்ச்சி திட்டங்கள் முடங்கிவிட்டன. மக்களின் பிரச்சினைகளை தீர்க்க யாரும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துக் கொண்டதால் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

ராமர் கோவிலை கட்ட...

2019-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை எடியூரப்பா தலைமையில் எதிர்கொள்வோம். அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட வேண்டும் என்பது எங்கள் கட்சியின் நோக்கம். இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

அதனால் இந்த விஷயத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ராமர் கோவிலை எதிர்ப்பதால் தான் காங்கிரஸ் அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி அதிகாரத்தை இழந்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும்.

இவ்வாறு ஈசுவரப்பா கூறினார்.

மேலும் செய்திகள்