குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த பிரபல திருடன் குண்டர் சட்டத்தில் கைது

குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த பிரபல திருடனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-12-04 22:15 GMT
காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த பாரூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட செல்லம்பட்டி, நாகரசம்பட்டி, வேலம்பட்டி, பாரூர், அரசம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர் வழிப்பறி மற்றும் இருசக்கர வாகனங்கள் திருட்டு உள்ளிட்ட தொடர் குற்ற சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இதுதொடர்பான புகார்களின் பேரில் பாரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் தலைமையிலான போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்தநிலையில் பாரூரை அடுத்த செல்லம்பட்டி பிரிவு பஸ் நிறுத்தம் அருகே டீ கடையில் இருந்து வந்த நபரிடம் கத்தியை காட்டி பணத்தை பறித்துக்கொண்டு ஓடிய வாலிபரை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர். பிடிபட்ட நபரிடம் பாரூர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காடையாம்பட்டியை சேர்ந்த வெள்ளப்பன் மகன் டியூக்அருள் என்கிற அருள்மணி (வயது 23) என்பதும், இப்பகுதிகளில் இவர் இருசக்கர வாகனங்களை திருடுவது, பொதுமக்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், பிரபல திருடன் அருள்மணியை கைது செய்து போச்சம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து இந்த பகுதிகளில் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த அருள்மணியை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய பாரூர் போலீசார், கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமாருக்கு பரிந்துரை செய்தனர்.

இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரையை ஏற்று அருள்மணியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் உத்தரவிட்டார்.


மேலும் செய்திகள்