நல்லம்பள்ளி அருகே, குடிநீர் கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பொதுமக்கள்

நல்லம்பள்ளி அருகே குடிநீர் கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட முயன்றனர்.;

Update:2018-12-05 05:00 IST
நல்லம்பள்ளி,

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சிக்குட்பட்டது வள்ளுவர் நகரில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த சில வாரங்களாக இந்த பகுதிக்கு முறையாக குடிநீர் வினியோக செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் இந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. இதுகுறித்து பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் குடிநீர் கேட்டு அந்த பகுதி பொதுமக்கள் நேற்று காலை ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் திடீரென ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஊராட்சி செயலர் சித்தேஸ்வரன் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குடிநீர் பிரச்சினையை போக்க ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்