சிறுவாச்சூர்-விளாமுத்தூர் தார்ச்சாலை பணி பாதியில் நிறுத்தம் பொதுமக்கள் அவதி

சிறுவாச்சூர்-விளாமுத்தூர் தார்ச்சாலை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

Update: 2018-12-04 22:30 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூரை அடுத்த சிறுவாச்சூரில் ஆதிசங்கரர் வழிபட்ட பெருமை பெற்ற மதுரகாளி அம்மன் கோவில் உள்ளது. வாரத்தில் ஒவ்வொரு திங்கள், வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசை, பவுர்ணமி தினங்களில் மட்டுமே திறந்திருக்கும். பெரம்பலூரில் இருந்து சிறுவாச்சூர் கோவிலுக்கு செல்ல துறைமங்கலம், மூன்று சாலை அல்லது கலெக்டர் அலுவலக சாலையை கடந்து சென்னை-திருச்சி நான்கு வழிச்சாலை வழியாக சென்றால் 8 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்யவேண்டும்.

ஆனால் பெரம்பலூரில் இருந்து சிறுவாச்சூருக்கு விளாமுத்தூர் சாலை வழியாக சென்றால் 5 கிலோ மீட்டர் தூரத்தில் எளிதாக செல்லமுடியும். ஆனால் விளாமுத்தூர்-சிறுவாச்சூர் சாலை போக்குவரத்துக்கு பயனற்ற வகையில் சாலை மிகமோசமாக இருந்து வந்தது. ஆகவே பிரதம மந்திரியின் கிராமச்சாலை திட்டத்தின்கீழ் ரூ.80 லட்சம் மதிப்பில் புதிய தார்ச்சாலை அமைத்திட ஊரக வளர்ச்சித்துறை மூலம் டெண்டர் விடப்பட்டு கடந்த சில மாதம் முன்பு தார்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

தற்போது இந்த சாலை கொத்திப்போடப்பட்டு, ஜல்லி கற்கள் நிரவப்பட்டுள்ளன. கடந்த 5 மாதங்களுக்கு மேலாகியும் நிரவப்பட்ட ஜல்லி கற்கள் மீது தார் ஊற்றாமல் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் விளாமுத்தூரில் இருந்து சைக்கிளில் மற்றும் நடந்து சென்று சிறுவாச்சூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்றுவரும் மாணவ -மாணவிகள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.

விளாமுத்தூரை சேர்ந்த விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் பசுமாடுகளில் கறந்த பாலை ஊற்றுவதற்கு 2 கிலோ மீட்டர் சைக்கிளில் அல்லது இருசக்கர வாகனத்தில் சிறுவாச்சூர் பால் சொசைட்டிக்கு வந்து, செல்லவேண்டி உள்ளதால் தடுமாற்றத்திற்கு ஆளாகின்றனர். இந்த பிரதான சாலை பணி முழுமை பெறாததால், விளாமுத்தூர் பொதுமக்கள், விவசாயிகள் சைக்கிளில் கூட சிறுவாச்சூர் சென்றுவரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பெரம்பலூில் இருந்து விளாமுத்தூர், சிறுவாச்சூர் வழியாக காரை, அய்யலூர், மருதடிக்கு இயக்கப்பட்டுவரும் மினி பஸ்களும், இந்த சாலையை சரிவர பயன் படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு விளாமுத்தூர்- சிறுவாச்சூர் சாலையை போர்க்கால அடிப்படையில் விரைந்து சரிசெய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கும், மாவட்ட ஊரக திட்ட இயக்குனர் மற்றும் பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு விவசாயிகளும், பள்ளி மாணவ-மாணவிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்