மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்கக்கோரி நெல்லையில் டாக்டர்கள் போராட்டம் நோயாளிகள் கடும் அவதி
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்கக்கோரி நெல்லையில் அரசு டாக்டர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்கக்கோரி நெல்லையில் அரசு டாக்டர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
டாக்டர்கள் வேலை நிறுத்தம்
தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றக்கூடிய டாக்டர்களுக்கு, மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். தேவையான பணப்பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று அரசு டாக்டர்கள் நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் அதாவது உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள மாவட்ட தலைமை ஆஸ்பத்திரி, தாலுகா ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றக்கூடிய 1,500-க்கும் மேற்பட்ட டாக்டர்களும் நேற்று இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். டாக்டர்கள் சிகிச்சைக்கு வந்த புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவில்லை. ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சல், நீரிழிவு நோய், ரத்த அழுத்தத்திற்கு சிகிச்சை பெறவும், மாத்திரை வாங்கவும் வந்த நோயாளிகள் திரும்பிச் சென்றனர்.
நோயாளிகள் அவதி
பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றக்கூடிய 350 டாக்டர்களும் நேற்று பணிக்கு வந்து இருந்தனர். ஆனால் அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டனர். இதனால் காலையில் ஆஸ்பத்திரிக்கு வந்த புறநோயாளிகள் அவதிக்கு உள்ளானார்கள். இதனால் நோயாளிகள் சலசலப்பில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து பயிற்சி டாக்டர்களும், பட்ட மேற்படிப்பு டாக்டர்களும் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.
இதுகுறித்து டாக்டர் முகமது ரபீக் கூறுகையில், ‘தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றக்கூடிய டாக்டர்களுக்கு, மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 16 ஆயிரம் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டத்தில் 1500 டாக்டர்களும், பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் 350 டாக்டர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். புறநோயாளிகளுக்கு மட்டும் தான் சிகிச்சை அளிக்கவில்லை. அவசர சிகிச்சை, அறுவை சிகிச்சை உள்ளிட்ட பணிகளில் மனிதாபிமானத்துடன் ஈடுபட்டனர்‘ என்றார்.
மாத்திரை வாங்க கூட்டம்
பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் மருந்து-மாத்திரை கொடுக்க போதிய மருந்தாளுனர்கள் இல்லாததால் தினமும் மாத்திரை வாங்க நோயாளிகள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
ஆனால் நேற்று டாக்டர்கள் போராட்டத்தால் சிகிச்சை பெற வந்தவர்களை ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சேர்க்காமல் அவர்களுக்கு பட்டமேற்படிப்பு படிக்கின்ற டாக்டர்கள், மருந்து, மாத்திரைகளை எழுதிக்கொடுத்து அனுப்பியதால் மாத்திரை வாங்க கூட்டம் அலைமோதியது. நோயாளிகள் வரிசையில் காத்திருந்து மாத்திரைகளை வாங்கிச் சென்றனர்.