ஆவின் நெய் விற்பனை ரூ.1½ கோடியாக உயர்த்தப்படும் தலைவர் சின்னத்துரை பேட்டி

ஆவின் நெய் விற்பனை ரூ.1½ கோடியாக உயர்த்தப்படும் என்று தலைவர் சின்னத்துரை கூறினார்.

Update: 2018-12-04 22:00 GMT
நெல்லை, 

ஆவின் நெய் விற்பனை ரூ.1½ கோடியாக உயர்த்தப்படும் என்று தலைவர் சின்னத்துரை கூறினார்.

ஆய்வு

நெல்லை ஆவின் நிறுவனத்தின் சார்பில் பாளையங்கோட்டை காமராஜர்நகரில் கோர்ட்டு எதிரே உயர்தர ஆவின் பாலகம் மற்றும் பால், ஐஸ்கிரீம், நெய், பால்கோவா உள்ளிட்ட பால் பொருட்கள் விற்பனை செய்யக்கூடிய விற்பனை நிலையம் பூங்கா வசதியுடன் உள்ளது. இந்த ஆவின் பாலகத்தில் தினமும் ரூ.72 ஆயிரம் வரை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த விற்பனை நிலையத்தில் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் சின்னத்துரை நேற்று ஆய்வு நடத்தினார். அப்போது அங்குள்ள ஆவணங்களை பார்வையிட்டார். அங்கு நடைபெறுகின்ற விற்பனை குறித்து கேட்டறிந்தார். அவருடன் ஆவின் பொது மேலாளர் ரெங்கநாததுரை, உதவி பொது மேலாளர் அருணகிரிநாதன், அ.தி.மு.க. நிர்வாகி கார்த்திக் என்ற ஆறுமுகம் உடன் இருந்தனர்.

பின்னர் சின்னத்துரை நிருபர்களிடம் கூறியதாவது:-

ரூ.1½ கோடியாக உயர்த்தப்படும்

பாளையங்கோட்டையில் உள்ள ஆவின் பால் விற்பனை நிலையம் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. நெல்லை ஆவின் நிறுவனத்தின் சார்பில் தினமும் 72 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

இதை 1 லட்சம் லிட்டராக உயர்த்த திட்டமிட்டு உள்ளோம். 60 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது ஒரு மாதத்திற்கு ரூ.90 லட்சத்திற்கு நெய் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விற்பனை விரைவில் ரூ.1½ கோடியாக உயர்த்தப்படும்.

பஸ் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பால் பொருட்கள் விற்பனை நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது நெல்லை மாவட்டத்தில் 15 இடங்களிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் 15 இடங்களிலும் பால் பொருட்கள் விற்பனை நிலையம் அமைக்கப்படும்.

பாளையங்கோட்டை புதிய பஸ்நிலையத்தில் ரூ.50 லட்சத்தில் புதிய ஹைடெக் ஆவின் பால்பொருட்கள் விற்பனை நிலையம் அமைக்கப்படும். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகையையொட்டி கூடுதல் பால் விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்