ஊட்டி தாவரவியல் பூங்காவில்: புதுப்பிக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன
ஊட்டி தாவரவியல் பூங்காவில் புதுப்பிக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் மீண்டும் பொருத்தப்பட்டு உள்ளன.
ஊட்டி,
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த அரசு தாவரவியல் பூங்கா உள்ளது. கடந்த 1848-ம் ஆண்டு தாவரவியல் பூங்கா உருவாக்கப்பட்டது. பூங்காவில் ஆண்டுதோறும் சராசரியாக 1,250 மில்லி மீட்டர் மழை பெய்யும். கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 250 மீட்டர் உயரத்தில் அமைந்து உள்ளது. பூங்காவின் மொத்த பரப்பளவு 22 ஹெக்டேர் ஆகும். இயற்கை எழில் மிகுந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு ஆண்டுதோறும் 35 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
உள்நாடு மட்டுமல்லாமல், மலேசியா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். பூங்காவை பாதுகாக்க சுற்றுலா பயணிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன. பூங்காவில் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட மரங்கள் உயரமாக வளர்ந்து இருக்கிறது. இது பூங்காவுக்கு அழகு சேர்க்கிறது. நடைபாதைகளில் நடந்து சென்றபடியே ஜப்பான் பூங்கா, பெரணி இல்லம், மலர் மாடம், பெரிய புல்வெளி மைதானம், இலைப்பூங்கா, இத்தாலியன் பூங்கா, கண்ணாடி மாளிகை பிறை சந்திரன் வடிவம் உள்ள அல்லி குளம், காட்சி முனை, அழகான வண்ண மலர் பாத்திகள் போன்றவற்றை காணலாம்.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பாதுகாப்பு கருதி நுழைவு வாயில், பூங்கா அலுவலகம் மற்றும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையின்போது மரங்கள் முறிந்து விழுந்ததால் கண்காணிப்பு கேமராக்கள் சேதமடைந்தன. மேலும் பூங்காவில் சுற்றித்திரியும் குரங்குகள் கேமராக்களில் இணைக்கப்பட்டு இருக்கும் ஒயர்கள் மீது ஏறி அங்கும், இங்கும் தாவி விளையாடுகின்றன. சில நேரங்களில் ஒயரை கடித்து இணைப்பை துண்டிக்கிறது. இதனால் கண்காணிப்பு கேமராக்கள் சேதமடைந்தும், இணைப்பு இல்லாமலும் காணப்பட்டன.
அதனை தொடர்ந்து கேமராக்களை புதுப்பித்து மீண்டும் பொருத்த தோட்டக்கலைத்துறை திட்டமிட்டது. அதன்படி தற்போது பூங்காவில் குரங்குகளால் இணைப்பு துண்டிக்கப்பட்ட ஒயர்கள் சரிசெய்யப்பட்டு இருக்கிறது. மரங்கள் வழியாக ஒயர்கள் கேமராக்களுக்கு செல்லாமல், பூமிக்கடியில் பதிக்கப்பட்டு இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. அவ்வாறு 16 கண்காணிப்பு கேமராக்கள் புதுப்பிக்கப்பட்டு கண்ணாடி மாளிகை, பெரிய புல்வெளி மைதானம் போன்ற இடங்களில் பொருத்தப்பட்டு உள்ளது. அதில் காட்சிகள் பதிவாவதோடு, அதனை அலுவலகத்தில் உள்ள கணினியில் நேரடியாக பார்க்கலாம்.
கோடை சீசன் காலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும் நேரங்களில் திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கேமராக்கள் மூலம் கண்காணிக்க முடியும்.