போலீஸ் நிலையத்தில் அ.தி.மு.க.வினருடன் மோதல்: டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் 2 பேர் கைது
இரு தரப்பினர் மோதல் தொடர்பாக டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி,
சென்னை, சாலிகிராமத்தை சேர்ந்தவர் குணசீலன் (வயது 36). அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் விருகை பகுதி ஜெயலலிதா பேரவை செயலாளராக உள்ளார். கேபிள் டி.வி.யும் நடத்தி வருகிறார். கடந்த 1–ந் தேதி சாலிகிராமம், தசரதபுரம் பகுதியில் கேபிள் டி.வி. அலுவலகம் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இவரது காரின் கண்ணாடியை அடையாளம் தெரியாத 5 பேர் அடித்து நொறுக்கியதுடன் அதன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதில் காரின் முன் பகுதி லேசாக கருகியது.
இதுகுறித்து குணசீலன் தரப்பில் விருகம்பாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் எம்.ஜி.ஆர். நகரில் அ.தி.மு.கவினர் வைத்த பேனரை குணசீலன் ஆதரவாளர்கள் கிழித்தது தெரியவந்தது. அதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் எதிர்தரப்பினர் காருக்கு தீ வைத்தனரா? என போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு கடந்த 2–ந் தேதி இரு தரப்பினரும் வந்தனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இது தொடர்பாக இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த மோதல் தொடர்பாக டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் அம்மன் ராஜா(35), பரணி(30) ஆகிய 2 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.