கோவில்பட்டி-திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் போராட்டம் நோயாளிகள் கடும் அவதி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவில்பட்டி-திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.;

Update: 2018-12-04 22:00 GMT
கோவில்பட்டி, 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவில்பட்டி-திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

கோவில்பட்டி

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும். உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஆஸ்பத்திரிகளில் நேற்று டாக்டர்கள் வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவில்பட்டியில் உள்ள மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் விஜயலட்சுமி, சரோன், காளசுவரி ஆகிய 3 டாக்டர்கள் மட்டுமே வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

மற்ற 21 டாக்டர்கள் வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வெளி நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெறுவதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்து நின்று அவதிப்பட்டனர். அவசர சிகிச்சை மற்றும் உள் நோயாளிகளுக்கு வழக்கம்போல் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

திருச்செந்தூர்

திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் வெளிநோயாளிகள் பிரிவில் பணியாற்றும் 13 டாக்டர்கள் நேற்று பணிக்கு வரவில்லை.

இதனால் அங்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகள் அவதிக்கு உள்ளாகினர். நீண்ட நேரம் காத்திருந்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதேபோன்று ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரியில் வெளிநோயாளிகள் பிரிவில் பணியாற்றும் 12 டாக்டர்களும் நேற்று பணிக்கு வராததால், நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதேபோன்று சாத்தான்குளம், விளாத்திகுளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளிலும் வெளிநோயாளிகள் பிரிவில் டாக்டர்கள் சிகிச்சை அளிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டதால், நோயாளிகள் பெரிதும் அவதி அடைந்தனர்.

மேலும் செய்திகள்