கோவில்பட்டி பகுதியில் 2,235 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்

கோவில்பட்டி பகுதியில் 2,235 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

Update: 2018-12-04 22:30 GMT
கோவில்பட்டி, 

கோவில்பட்டி பகுதியில் 2,235 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா

கோவில்பட்டி அருகே வில்லிசேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகேசன், கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ 192 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். பின்னர் அவர் கோவில்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 903 மாணவிகளுக்கும், வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 275 மாணவர்களுக்கும், எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப்பள்ளியில் 377 மாணவர்களுக்கும், லட்சுமி மில் மேல்நிலைப்பள்ளியில் 273 மாணவர்களுக்கும், கம்மவார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 215 மாணவிகளுக்கும் இலவச சைக்கிள்களை வழங்கினார்.

புயல் நிவாரண நிதி

விழாவில் தாசில்தார் பரமசிவன், நகரசபை ஆணையாளர் அட்சயா, யூனியன் ஆணையாளர் கிரி, மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மோகன், அ.தி.மு.க. நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், பஞ்சாயத்து செயலாளர் ரமேஷ், மகாலட்சுமி கல்வி அறக்கட்டளை தலைவர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ‘கஜா‘ புயல் நிவாரண நிதியாக, கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் ரூ.87 ஆயிரத்துக்கான காசோலையை அமைச்சரிடம் வழங்கினர். பள்ளி தலைவர் எவரெஸ்ட் ராமச்சந்திரன், தலைமை ஆசிரியை சாந்தினி மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உடன் இருந்தனர்.

கோவில்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட ஆய்வுக்கூடத்தை அமைச்சர் திறந்து வைத்து பார்வையிட்டார்.

மேலும் செய்திகள்