ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட கிராம மக்கள் வலியுறுத்தல்

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட கிராமமக்களும், ஒப்பந்ததாரர்களும் மனு கொடுத்தனர்.

Update: 2018-12-04 22:00 GMT
தூத்துக்குடி, 

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட கிராமமக்களும், ஒப்பந்ததாரர்களும் மனு கொடுத்தனர்.

கிராம மக்கள்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஒப்பந்தக்காரர் தியாகராஜன் தலைமையில் திரளான ஒப்பந்ததாரர்கள் பொதுமக்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு சென்றனர். அங்கு ஆலையை திறக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

இதேபோன்று தூத்துக்குடி மண்டல அனைத்து லாரி உரிமையாளர் சங்கம், கனரக வாகன உரிமையாளர்கள் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

கோரிக்கை மனு

மேலும் இந்து மக்கள் கட்சியினர் மாநில பொதுச்செயலாளர் செல்வசுந்தர், மாவட்ட தலைவர் கணேசன் ஆகியோர் தலைமையிலும் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். இந்த அமைப்பினர் தனித்தனியாக ஆலையை திறக்க வலியுறுத்தி மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பனிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுக்களில் கூறி இருப்பதாவது:-

இந்தியாவின் வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளில் உலக தரவரிசையில் முன்னேறி வருகிறது. இதை பிடிக்காத சில அமைப்பினர் எந்த திட்டத்தையும், தொழிற்சாலைகளையும் நடைபெற விடாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வரிசையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சில அமைப்பினர் மக்களை மூளைச்சலவை செய்து கலவரத்தை ஏற்படுத்தினர். இதனால் ஆலை மூடப்பட்டது. இதன்மூலம் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வேலைவாய்ப்பை இழந்து உள்ளன. பொருளாதாரம் மிகவும் சரிந்து உள்ளது.

ஆலையை திறக்க வேண்டும்

தூத்துக்குடி மாநகரத்தில் லாரிகள் ஓட்டி தொழில் செய்து வருகிறோம். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் லாரி வாங்கிய கடனை அடைக்க வருமானம் இன்றி, வாங்கிய வண்டியை நிதிநிறுவனங்கள் எடுத்து சென்று வாழ வழி இல்லாமல் தவிக்கிறோம்.

சுற்று வட்டார கிராமங்களில் இருந்து பலர் இந்த ஆலையில் வேலை பார்த்து வந்தோம். தற்போது ஆலை மூடப்பட்டதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கேள்விக்குறியாகி உள்ளது. ஆகையால் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக ஏராளமான மக்கள் திரண்டதால் கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்றவர்கள் உரிய விசாரணைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்