மூதாட்டி பிணமாக கிடந்த வழக்கில் திடீர் திருப்பம்: ‘அத்தை மகளை திருமணம் செய்ய எதிர்த்ததால் கொன்றேன்’ - கைதான பேரன் பரபரப்பு வாக்குமூலம்

கச்சிராயப்பாளையம் அருகே மூதாட்டி பிணமாக கிடந்த வழக்கில் திடீர் திருப்பமாக, அவரது தலையில் கல்லை போட்டு கொன்ற பேரனை போலீசார் கைது செய்தனர். அத்தை மகளை திருமணம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் கொன்றதாக அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Update: 2018-12-04 22:15 GMT
கச்சிராயப்பாளையம்,

கச்சிராயப்பாளையம் அருகே கல்வராயன்மலையில் உள்ள பன்னிப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பிச்சன். இவரது மனைவி ராமாயி (வயது 70). இவர்களுக்கு சீனிவாசன்(50), ஆண்டி(47) என்ற 2 மகன்களும் செல்லம்மாள்(37) என்ற மகளும் உள்ளனர். 3 பேருக்கும் திருமணம் ஆகி குடும்பத்துடன் அதே பகுதியில் வசித்து வருகின்றனர்.

ஆண்டிக்கு அருள்(24), அண்ணாதுரை(19) என்ற 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இதில் அருள் மற்றும் 2 மகள்களுக்கு திருமணம் ஆகி விட்டது. அண்ணாதுரைக்கு திருமணம் செய்து வைக்க பெண் தேடி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி காலை 7 மணியளவில் ராமாயி அதே பகுதியில் உள்ள வயலுக்கு செல்வதாக சீனிவாசனிடம் கூறிச்சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து சீனிவாசன் மற்றும் உறவினர்கள் ராமாயியை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது பன்னிப்பாடி-முண்டியூர் செல்லும் சாலையில் உள்ள முட்புதருக்குள் தலையில் ரத்தக்காயங்களுடன் ராமாயி பிணமாக கிடந்தார். இதுகுறித்து சீனிவாசன் கரியாலூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே ராமாயி சாவு குறித்து விசாரிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில், கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் கிள்ளிவளவன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

அந்த தனிப்படை போலீசார் ராமாயியின் உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது ஆண்டி மகன் அண்ணாதுரை தனது அத்தை செல்லம்மாளின் மகளை காதலித்து வந்ததும், அவரை திருமணம் செய்ய ராமாயி எதிர்ப்பு தெரிவித்ததும், இதனால் ராமாயியிக்கும் அண்ணாதுரைக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அண்ணாதுரையை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், தனது அத்தை மகளை திருமணம் செய்ய ராமாயி எதிர்ப்பு தெரிவித்ததால், அவரது தலையில் கல்லை போட்டு கொன்றதாக கூறினார். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணாதுரையை கைது செய்தனர். அப்போது அவர் போலீசில் வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நானும் எனது அத்தை செல்லம்மாளின் மகளும் காதலித்து வந்தோம். தற்போது இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தோம். ஆனால் எனது பாட்டி ராமாயி எங்களது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

இதனால் பாட்டி ராமாயி மீது கோபத்தில் இருந்து வந்தேன். பாட்டி இருக்கும் வரை அத்தை மகளுடன் எனக்கு திருமணம் நடக்காது என்று கருதி, அவரை கொலை செய்ய முடிவு செய்து, அதற்கான சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தேன்.

கடந்த 2-ந் தேதி காலை 7 மணி அளவில் வனப்பகுதியில் உள்ள வயலுக்கு செல்வதாக வீட்டில் உள்ளவர்களிடம் பாட்டி ராமாயி கூறிச்சென்றார். வனப்பகுதி அருகே சென்றதும் பாட்டியை வழிமறித்து, அத்தை மகளை தனக்கு திருமணம் செய்து வைக்க சம்மதிக்குமாறு வற்புறுத்தினேன். அதற்கு ராமாயி எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த நான் ராமாயியை கையால் தாக்கினேன். இதில் அவர் மயங்கி கீழே விழுந்தார். பின்னர் அருகில் கிடந்த கல்லை எடுத்து அவரது தலையில் போட்டேன். இதில் அவர் அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். தொடர்ந்து அவரது உடலை சாலையோரம் இருந்த முட்புதருக்குள் வீசி விட்டு வீட்டுக்கு சென்று, ஒன்றும் தெரியாதது போல் இருந்தேன். ஆனால் போலீசாரின் விசாரணையில் சிக்கிக்கொண்டேன்.

இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறியிருந்தார்.

அத்தை மகளை திருமணம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் பாட்டியை பேரனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்