மாற்று திறனாளிகளின் கடன் வட்டியை தள்ளுபடி செய்வோம் - நாராயணசாமி உறுதி

மாற்று திறனாளிகளின் கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுப்போம் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Update: 2018-12-04 00:06 GMT

புதுச்சேரி,

புதுவை அரசின் சமூக நலத்துறை சார்பில் சர்வதேச மாற்று திறனாளிகள் தினவிழா ஜெயராம் திருமண நிலையத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். இயக்குனர் சாரங்கபாணி வரவேற்று பேசினார்.

விழாவில் மத்திய அரசின் மாற்று திறனாளிகள் உரிமை சட்டம் 2016–ன்கீழ் புதுவை மாநிலத்துக்கான விதிகள் உருவாக்கப்பட்டு மாநில அரசின் ஒப்புதலுடன் அரசாணை வெளியிடப்பட்டது. 19 மாற்று திறனாளி தம்பதியருக்கு திருமண உதவித்தொகையும், முடநீக்கு கருவிகளும், விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்றோருக்கு பரிசுகளும், அரசு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாற்று திறனாளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

அப்போது முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:–

புதுவை மாநிலத்துக்கு மத்திய அரசு போதிய நிதியை தருவதில்லை. மற்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு 42 சதவீத நிதியை வழங்குகிறது. ஆனால் புதுச்சேரிக்கு 25 சதவீதம்தான் தருகிறது. கடந்த காலங்களில் நமக்கு 90 சதவீத நிதி மானியமாக கிடைத்தது.

பின்னர் அது 70 சதவீதமாக குறைந்தது. ரங்கசாமி முதல்–அமைச்சராக இருந்தபோது தனிக்கணக்கு தொடங்கினார். அதைத்தொடர்ந்து நிதியுதவி 30 சதவீதமாக குறைந்தது. இப்போது மத்திய அரசு 25 சதவீத நிதியைத்தான் மானியமாக தருகிறது. ரங்கசாமி வாங்கிய கடன்களை எல்லாம் நாங்கள் கட்டி வருகிறோம்.

நமது மாநிலத்தின் வருமானம் ரூ.4 ஆயிரத்து 500 கோடிதான். கடந்த ஆண்டு ரூ.400 கோடி வருமானத்தை உயர்த்தி உள்ளோம். புதுவையில் திட்டங்களை செயல்படுத்த யார், யார்? முட்டுக்கட்டையாக உள்ளனர் என்பது உங்களுக்கு தெரியும். இன்னும் சில மாதங்களில் அந்த முட்டுக்கட்டைகள் நீங்கிவிடும். அப்போது புதுவையில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படும்.

எனது நண்பர்கள் மத்திய மந்திரிகளாக உள்ளனர். ஆனால் அவர்கள் நமக்கு நிதி தர பயப்படுகிறார்கள். இதற்கு அவர்களது மேலிடம்தான் காரணம்.

நலச்சங்கம் அமைப்பது உள்ளிட்ட மாற்று திறனாளிகளின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும். அவர்களது கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுப்போம். அதேபோல் இலவச பஸ்பாஸ், இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் மாற்று திறனாளி மாணவர்களுக்கு தமிழகத்தைப்போல் நிதியுதவி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

புதுவையின் வளர்ச்சியை கெடுப்பதற்காகவே சிலர் உள்ளனர். நான் எம்.பி.யாக இருந்த காலகட்டத்தில் 13 ரெயில்கள் புதுச்சேரியில் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன்பின் இப்போது ஒரு புதிய ரெயில்கூட விடப்படவில்லை. காரைக்காலில் என்.ஐ.டி. கொண்டுவந்தோம். அதன்பின் எந்த புதிய திட்டமும் வரவில்லை. சேதராப்பட்டில் ஜிப்மர் கிளையை நிறுவ தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர் கந்தசாமி பேசியதாவது:–

மாற்று திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க விரைவில் அரசாணை வெளியிடப்படும். கடந்த 2½ ஆண்டுகளாக திட்டங்களை போராடி செய்து வருகிறோம். அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் 10 ஆயிரம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இன்றைய நிலைப்பாடு என்ன என்பது உங்களுக்கு தெரியும்.

மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசு எந்த நிதியும் தருவதில்லை. இன்னும் 5 மாதத்தில் மாற்றம் வரும். எனவே நம்பிக்கையோடு இருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்