புனேயில் பயங்கரம் ரியல் எஸ்டேட் ஏஜெண்டு துப்பாக்கியால் சுடப்பட்டார் ஒருவரை பிடித்து விசாரணை

புனேயில் ரியல் எஸ்டேட் ஏஜெண்டு துப்பாக்கியால் சுடப்பட்டார். இது தொடர்பாக ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2018-12-03 23:31 GMT
புனே,

புனேயை சேர்ந்த ரியல் எஸ்டேட் ஏஜெண்டு ஹரிஓம் மெகர்சிங் (வயது30). இவர் சம்பவத்தன்று இரவு கஜ்ரத்- தெகுரோடு சாலையில் உள்ள ஒரு கடைக்கு சென்றுவிட்டு, தனது காரில் வந்து ஏறினார். அப்போது, அவரது காரில் திடீரென 3 பேர் ஏறினார்கள். டிரைவர் இருக்கைக்கு அருகே வந்து அமர்ந்த நபர், திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, ஹரிஓம் மெகர்சிங் வயிற்றில் வைத்து நீ சாக விரும்புகிறாயா? என கேட்டார்.

இதை கேட்டதும் அவர் பதறிப்போனார். விபரீதம் நடக்க உள்ளதை உணர்ந்த அவர், உடனே சுதாரித்து கொண்டு காரில் இருந்து கீழே இறங்கி ஓடினார்.

அப்போது, அந்த ஆசாமி ஹரிஓம் மெகர்சிங்கை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில், அவரது காலில் குண்டு பாய்ந்ததில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதையடுத்து அந்த ஆசாமிகள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். சத்தம்கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஹரிஓம் மெகர்சிங்கை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

மேலும் அவரை துப்பாக்கியால் சுட்ட ஆசாமிகளை பிடிப்பதற்காக அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டனர். இதன் மூலம் போலீசார் ஒருவரை அடையாளம் கண்டு அந்த நபரை பிடித்தனர். என்ன காரணத்துக்காக ஹரிஓம் மெகர்சிங்கை சுட்டனர் என்பதை கண்டறிய போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தலைமறைவான மற்ற இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்