மதுரை மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை; 10–ந் தேதி முதல் அமல்படுத்த ஐகோர்ட்டு உத்தரவு
மதுரை மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதித்தும், கோர்ட்டு உத்தரவை வருகிற 10–ந்தேதி முதல் அமல்படுத்த வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.;
மதுரை,
மதுரை யாகப்பாநகர் மேற்கு குடியிருப்போர் நலச்சங்க தலைவர் இருளாண்டி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:–
நம் நாட்டில் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள், குழாய்கள் ஆகியவற்றால் சுற்றுச்சூழலுக்கும், பொது சுகாதாரத்துக்கும் மிகப்பெரிய தீங்குகள் ஏற்பட்டு வருகின்றன. சில பிளாஸ்டிக் பொருட்கள் மறுசுழற்சி செய்ய முடியாதவையாக உள்ளன. திறந்த வெளியிலும், நீர் நிலைகளிலும் பிளாஸ்டிக் கழிவுகள் மலை போல கொட்டப்படுகின்றன. இதனால் நீர் நிலைகள் மாசடைந்து வருகிறது. பல இடங்களில் பிளாஸ்டிக் குப்பைகள் எரிக்கப்படுவதால் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. பிளாஸ்டிக் கொட்டப்படும் நிலம் மீண்டும் சாகுபடி செய்ய முடியாத நிலைக்கு மாறுகிறது. கடலில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் மீன்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.
வனப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் வீசப்படுவதால் வனம் சீரழிவதுடன், வன விலங்குகள் உயிரிழக்கின்றன. தாவரங்களின் வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. பொதுமக்கள் சுகாதாரத்துடனும், அமைதியாகவும் வாழ்வது அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். பிளாஸ்டிக் பயன்பாடு காரணமாக அந்த அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக்குக்கு மாற்று பொருள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. எனவே தமிழகத்தில் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்கை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
முடிவில் நீதிபதிகள், “முதற்கட்டமாக மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்கை பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவை வருகிற 10–ந்தேதி முதல் இதனை நடைமுறைப்படுத்தவும், மீறுபவர்களுக்கு முதற்கட்டமாக ரூ.500 அபராதமும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை தொடர்ந்து விற்பனை செய்தால் கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்“ என்று மாநகராட்சிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 10–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.