திண்டிவனம் அருகே: அரசு பஸ்கள் நேருக்குநேர் மோதல்; 20 பேர் படுகாயம்
திண்டிவனம் அருகே அரசு பஸ்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில் 20 பேர் படுகாயமடைந்தனர்.
திண்டிவனம்,
சென்னையில் இருந்து நேற்று மதியம் அரசு விரைவு பஸ் ஒன்று திருச்சி நோக்கி புறப்பட்டது. பஸ்சை பெரம்பலூரை சேர்ந்த சுப்பிரமணி(வயது 57) என்பவர் ஓட்டினார். மாலையில் அந்த பஸ் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே, விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ்சும், விரைவு பஸ்சும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் சென்னை-திருச்சி விரைவு பஸ்சில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த ஜெகநாதன்(68), பேராவூரை சேர்ந்த பழனி மனைவி அம்பிகா(43), ஏழுமலை மனைவி சுகுனா(32), வெங்கடகிருஷ்ணன் மனைவி மஞ்சுளா(43), விரைவு பஸ் டிரைவர் சுப்பிரமணி மற்றும் விழுப்புரம்-சென்னை பஸ்சில் வந்த சென்னையை சேர்ந்த கணேஷ் மனைவி ராஜலட்சுமி(38), தர்மபுரியை சேர்ந்த பாலு மனைவி அனிதா(20), அன்னியூரை சேர்ந்த பாபு(30), அவரது மனைவி கீதா(27), விழுப்புரத்தை சேர்ந்த மாணிக்கம்(58), பெருங்களத்தூரை சேர்ந்த முரளிதரன் மனைவி கோமதி(43), பஸ் டிரைவர் விழுப்புரத்தை சேர்ந்த ரவி(51) உள்பட 20 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்து பற்றி தகவல் அறிந்ததும் திண்டிவனம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதனிடையே விபத்துக்குள்ளான பஸ்களை போலீசார் சாலையில் இருந்து அப்புறப்படுத்தி, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இந்த விபத்து காரணமாக விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.