அவலூர்பேட்டையில்: 2 கடைகளில் ரூ.45 ஆயிரம் திருட்டு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

அவலூர்பேட்டையில் உள்ள 2 கடைகளில் ரூ.45 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-12-03 22:00 GMT
மேல்மலையனூர், 

மேல்மலையனூர் அருகே உள்ள ஆணைப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் குமாரசாமி மகன் அருண்குமார் (வயது 29). இவர் அவலூர்பேட்டையில் டைல்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு அருண்குமார் வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலை கடையை திறக்க வந்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அருண்குமார் கடைக்குள் சென்று பார்த்தார். அப்போது கடையில் வைத்திருந்த ரூ.23 ஆயிரத்து 500-ஐ காணவில்லை.

இதுபற்றி தகவல் அறிந்த அவலூர்பேட்டை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சீனுவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நேற்று முன்தினம் அருண்குமார் கடையை பூட்டி விட்டு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.

பின்னர் கடையில் இருந்த ரூ.23 ஆயிரத்து 500-ஐ திருடியுள்ளனர். தொடர்ந்து அருகில் இருந்த இரும்புக்கடைக்குள் புகுந்த மர்மநபர்கள், அங்கிருந்த ரூ.21 ஆயிரத்து 500-ஐ திருடிக்கொண்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 கடைகளில் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்