தமிழக அரசு கேட்ட நிவாரண நிதி கிடைக்க வில்லை - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி

கஜா புயல் நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்ட நிதி கிடைக்கவில்லை என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.

Update: 2018-12-03 23:00 GMT

சிவகாசி,

உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா சிவகாசியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ரூ.15 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார். பின்னர் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 250 பேருக்கு சீருடைகள் வாங்குவதற்கு ரூ.50 ஆயிரத்தை தனது சொந்த பணத்தில் இருந்து வழங்கினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:–

தமிழக அரசு சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் பல கோடி ரூபாய் செலவில் வழங்கப்பட்டு வருகிறது. நமது தொகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கைகளை என்னிடம் எப்போது வேண்டுமானாலும் தெரிவிக்கலாம். உங்கள் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படும். மோட்டார் சைக்கிள் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பம் கொடுத்தால் அதற்கான நடவடிக்கையை உடனே எடுக்க தயாராக இருக்கிறேன். தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அதை வாங்கி தர ஏற்பாடு செய்கிறேன்.

நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. சந்திரபிரபா, கலெக்டர் சிவஞானம், மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார், சிவகாசி ஆர்.டி.ஓ. தினகரன், தாசில்தார் பரமானந்தராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணியம், சங்கரநாராயணன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறுகையில், “பட்டாசு ஆலை நிர்வாகிகள் தங்களின் பிரச்சினைகள் தொடர்பாக விரைவில் முதல்–அமைச்சர்களை சந்திக்க உள்ளனர். மத்திய அரசு முதல்–அமைச்சர் கேட்ட நிதியை கொடுக்கவில்லை. மத்திய அரசு தற்போது ஒதுக்கி உள்ள நிவாரண நிதி யானை பசிக்கு சோளப்பொறி போன்றதாகும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்யும். கஜா புயல் பாதிப்பில் இருந்து மக்களை இந்த அரசு விரைந்து மீட்டு வருகிறது. இதில் மின் வாரியம் சிறப்பாக செயல்பட்டது. பால்வளத்துறையில் இருந்து அனைத்து முகாம்களுக்கும் இலவசமாக பால் வழங்கப்பட்டது. என்றார்.

மேலும் செய்திகள்