குடிநீர் சீராக வினியோகம் செய்யக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

அவினாசி அருகே குடிநீர் சீராக வினியோகம் செய்யக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-12-03 22:30 GMT

அவினாசி,

அவினாசியை அடுத்த துலுக்கமுத்தூர் ஊராட்சியில் நல்லகட்டிபாளையம், பட்டம்பாளையம், சாலையப்பாளையம், காட்டுவளவு, கள்ளுமடை, ஏ.டி.காலனி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதி பொதுமக்களுக்கு 4 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறிந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தனர்.

ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் துலுக்கமுத்தூர் நால்ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் அவினாசி போலீஸ்இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சப்–இன்ஸ்பெக்டர் செந்தில், குடிநீர்வடிகால் வாரிய அதிகாரி ரவிச்சந்திரன் மற்றும் அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது பொதுமக்கள் கூறியதாவது:–

எங்கள் பகுதிக்கு கடந்த 4 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தினமும் காலையில் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று குடிநீர் பிடித்து வரவேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக ஆலாம்பாளையம், அய்யம்பாளையம் மற்றும் ஊஞ்சப்பாளையம் ஊர்களுக்கு சென்று குடிநீர் பிடித்து வரவேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மிகவும் அவதிப்படுகிறோம். எனவே எங்களுக்கு சீரான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதையடுத்து 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உறுதி அளித்ததன்பேரில் சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் துலுக்கமுத்தூர்–அவினாசி, நம்பியூர் செல்லும் ரோட்டில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்