மலேசியாவுக்கு வேலைக்கு சென்ற 49 பேரை மீட்டுத்தர வேண்டும் நெல்லை கலெக்டரிடம், உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை
மலேசியாவுக்கு வேலைக்கு சென்ற 49 பேரை மீட்டுத்தர வேண்டும் என்று கோரி கலெக்டரிடம் உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.
நெல்லை,
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. கடையநல்லூர் அருகே உள்ள தலைவன்கோட்டை கிராம மக்கள் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பூசைப்பாண்டியன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள், தங்கள் ஊரில் இருந்து மலேசியாவுக்கு வேலைக்கு சென்ற 49 பேர் அங்கு கொத்தடிமைகளாக நடத்தப்படுகிறார்கள். அவர்களை மீட்டுத்தர வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் கலெக்டர் ஷில்பாவை சந்தித்து மனு கொடுத்தனர். அப்போது சில பெண்கள் தங்களுடைய கணவனை மீட்டு தாருங்கள் என்று கண்ணீர்மல்க கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் ஷில்பா உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நெல்லை வட்டாரத்தை சேர்ந்த 49 பேர் மலேசியா நாட்டிற்கு சில கம்பெனிகளின் மூலம் உயர்மின்கம்பம் அமைக்கும் வேலைக்கு ஒப்பந்த அடிப்படையில் அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சரியாக உணவு, இருப்பிடம் கொடுக்காமல் அவர்களை கொத்தடிமைகள் போல் நடத்துகிறார்கள்.
அவர்களுக்கு 4 மாதமாக சம்பளம் வழங்கவில்லை. அவர்கள் தங்களை கம்பெனி நிர்வாகத்தினர் கொடுமைப்படுத்துவதாக எங்களுக்கு ‘வாட்ஸ்-அப்’பில் தகவல் அனுப்பி உள்ளனர். எனவே அவர்களை மீட்டு தாய்நாட்டிற்கு அழைத்துவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.