புதுக்கோட்டை அருந்ததியர் தெருவில் இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு

புதுக்கோட்டை அருந்ததியர் தெருவில் இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

Update: 2018-12-03 22:45 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் தலைமை தாங்கினார். அவர் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஆதிதமிழர் கட்சி சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை ஆஸ்பத்திரி தெரு, அருந்ததியர் தெருவில் சுமார் 500 குடும்பங்கள் உள்ளன. அருந்ததியர் தெருவில் இறந்தவர்களை எடுத்து செல்லும் பாதையை அடைத்து டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் இறந்தவர்களை அடக்கம் செய்ய எடுத்து செல்வதற்கு சிரமமாக உள்ளது. எனவே அந்த டாஸ்மாக் கடையை உடனே அகற்ற வேண்டும் என்று கூறி இருந்தனர்.

தூத்துக்குடி மாவட்ட தென்மண்டல ஒருங்கிணைந்த மாற்றுத்திறனுடையோர் முன்னேற்ற சங்கத்தினர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து மனு கொடுத்தனர். அதில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பஸ் நிலையங்களிலும் மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை கட்டப்பட்டு உள்ளது. ஆனால் அவைகள் திறக்கப்படவில்லை. அவைகளை பராமரிப்புடன் திறந்து வைக்க வேண்டும். மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை வசதி இல்லை. அந்த வசதியை செய்து தர வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

கரிசல்பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் கொடுத்த மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயத்துக்கு இணையாக கால்நடை வளர்ப்பு நடந்து வருகிறது. தற்போது மழை காலம் என்பதால் பசுந்தீவனங்களை ஆடுகள் காலை நேரத்தில் உண்ணும் போது ஒருவித வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு அவைகள் இறந்து விடுகின்றன. மாடுகளுக்கு கோமாரி நோய் எனப்படும் வாய் மற்றும் கால்களில் புண் ஏற்படுகிறது. மாவட்டத்தில் சில கிராமங்களில் இந்த கோமாரி நோய் தாக்கம் காணப்படுகிறது. நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். ஆனால் மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் இருப்பு இல்லை. அவைகளை உடனடியாக வழங்க வேண்டும். கோமாரி நோய் பாதிப்புகளை தவிர்க்க முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி போட வேண்டும் என்று கூறி இருந்தார்.

புதியம்புத்தூரை சேர்ந்த ராஜா என்பவர் கொடுத்த மனுவில், நான் புதியம்புத்தூரில் உள்ள ஒரு ஜவுளி கடையில் பணியாற்றி வருகிறேன். கடந்த 7.11.18 அன்று தீபாவளி பண்டிகை வியாபாரத்துக்கான தொகையை வசூல் செய்ய என்னுடன் பணியாற்றி வரும் கணேசன் என்பவருடன் மணப்பாறைக்கு சென்றேன். அங்கு சென்று வேலையை முடித்துவிட்டு அங்கிருந்து புதுக்கோட்டை காவல்நிலையத்துக்கு அருகே உள்ள ஒரு டீக்கடை முன்பு நின்று கொண்டு இருந்தேன். அப்போது அங்கு வந்த 4 பேர் தங்களை போலீசார் என்று கூறி நான் வைத்து இருந்த பையை வாங்கி சோதனை செய்தனர். அதில் வியாபாரத்துக்கான தொகையை வசூல் செய்து ரூ.4 லட்சத்து 70 ஆயிரத்து 800 வைத்து இருந்தேன். சோதனைக்கு பின்னர் நான் ஊருக்கு வந்து விட்டேன். வீட்டுக்கு வந்து பார்த்த போது பையில் இருந்த பணத்தில் ரூ.4 லட்சத்து 23 ஆயிரம் மாயமானது தெரியவந்தது. இதனையடுத்து மீண்டும் புதுக்கோட்டைக்கு சென்று, புகார் கொடுத்தேன். ஆனால் போலீசார் புகாரை வாங்க மறுத்து என் மீது கஞ்சா வழக்கு போட்டுவிடுவதாக மிரட்டினார். எனவே பாதிக்கப்பட்ட எனக்கு பணத்தை திருப்பி கிடைக்க வழி செய்ய வேண்டும். போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

ஆத்மலிங்க பிரபாஞ்சல்யம் அமைப்பின் தூத்துக்குடி மாவட்ட கிளை சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜெ.ஜெ.நகர் பகுதிகளில் குழந்தைக்களுக்கான குழந்தைகள் நல மையம் அமைத்து தர வேண்டும். ஜெ.ஜெ.நகர் 2-வது வார்டில் பொதுமக்களுக்கு ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என்று கூறி இருந்தனர்.

தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் நலச்சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் புற்றுநோயாளிகளுக்கு வலி நிவாரண சிகிச்சை மையம் இல்லை. எனவே வலி நிவாரண சிகிச்சை மையம் அமைக்கப்பட வேண்டும் என்று கூறி இருந்தனர்.

மேலும் செய்திகள்