பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற: வாலிபர்களை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய பொதுமக்கள் - சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரலாக பரவுகிறது

கோவையில் பெண்ணிடம் நகையை பறிக்க முயன்ற வாலிபர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்து மரத்தில் கட்டி வைத்து தாக்கினர். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Update: 2018-12-03 22:30 GMT
கோவை,

கோவை வெள்ளலூர் பட்டணம் சாலையை சேர்ந்த பெண், அங்குள்ள முல்லை நகரில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள், அந்த பெண் அணிந்து இருந்த 3 பவுன் நகையை பறிக்க முயன்றனர். அப்போது அந்த பெண் கழுத்தில் கிடந்த நகையை பிடித்துக்கொண்டு திருடன், திருடன் என்று கத்தினார்.

உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். அதை பார்த்த அந்த நபர்கள் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றனர். எனினும் பொதுமக்கள் அவர்களை விரட்டிச்சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை அங்குள்ள மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர்.

இது குறித்து தகவலறிந்த போத்தனூர் போலீசார் விரைந்து சென்று அந்த நபர்களை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் சென்னையை சேர்ந்த விஜயராகவன் (வயது 25), கார்த்திக் (24) என்பதும், பல இடங்களில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகையை பறித்து சென்றதும் தெரியவந்தது.

மேலும் நேற்று முன்தினம் கோவையை அடுத்த பி.என்.புதூரை சேர்ந்த ரமாதேவி (71) என்பவரிடம் 4 பவுன் நகையை பறித்ததும், அங்கிருந்து வந்து முல்லை நகரில் பெண்ணிடம் நகையை பறிக்க முயன்றபோது பொதுமக்களிடம் மாட்டிக்கொண்டதும் தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே, அவர்கள் 2 பேரையும் பொதுமக்கள் மடக்கி பிடித்து கட்டி வைத்து அடிக்கும் போது அதை சிலர் வீடியோவாக எடுத்துள்ளனர். அதை வாட்ஸ்-அப், முகநூல் போன்ற சமூக வலைத்தளத்தில் பரவ விட்டனர். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதில் ஒரு பெண் கட்டையை எடுத்து அந்த 2 வாலிபர்களையும் சரமாரியாக அடிக்கும் காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்