ஒரத்தநாடு அருகே ஏரியில் மூழ்கிய 5 பெண்கள் உள்பட 6 பேர் மீட்பு என்ஜினீயருக்கு பாராட்டு

ஒரத்தநாடு அருகே ஏரியில் மூழ்கிய 5 பெண்கள் உள்ளிட்ட 6 பேர் மீட்கப்பட்டனர். அவர்களை ஏரியில் இருந்து மீட்ட என்ஜினீயருக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.;

Update: 2018-12-03 22:30 GMT
ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடுமேலையூர் கிராமத்தில் வெள்ளையங்கி ஏரி உள்ளது. இந்த ஏரி சமீபத்தில் தூர்வாரப்பட்ட நிலையில் தற்போது ஏரியில் தண்ணீர் நிரம்பி உள்ளது. இந்நிலையில் சமீபத்திய கஜா புயலில் மின்கம்பங்கள் சேதமடைந்ததால் அந்த பகுதியில் மின்வினியோகம் தடைபட்டுள்ளது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த சுதந்திரதேவி (வயது35) தனது மகள் சுடர்விழியை (14) அழைத்துக்கொண்டு வெள்ளையங்கி ஏரிக்கு குளிக்க சென்றுள்ளார். அங்கு அதே பகுதியை சேர்ந்த சுபதினா(14), கல்பனா,(11) மற்றும் ஆரோக்கியமேரி (52) ஆகியோரும் அங்கு குளித்துள்ளனர். அப்போது சுடர்விழி, சுபதினா மற்றும் கல்பனா ஆகிய 3 பேரும் சற்று ஆழத்துக்கு சென்று குளித்தனர். இதனால் அவர்கள் 3 பேரும் சேற்றில் சிக்கி வெளியே வரமுடியாமல் தவித்தனர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சுதந்திராதேவியும், ஆரோக்கியமேரியும் அடுத்தடுத்து ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்று 3 பேரையும் காப்பாற்ற முயன்றனர். அப்போது அவர்களும் சேற்றில் சிக்கினர். இந்தநேரம் அந்த வழியாக வந்த அதே பகுதியை சேர்ந்த முத்துச்சாமி(60) விவசாயி, உடனே ஏரியில் இங்கி தண்ணீரில் தத்தளித்த 5 பேரையும் காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரும் சேற்றில் சிக்கினார். .

சத்தம் போட்டனர்

இந்த நேரத்தில் வயல் பகுதிக்கு செல்வதற்காக அதே ஊரை சேர்ந்த ராதா கிருஷ்ணன் மகன் ஸ்ரீதர்(22) (என்ஜினீயரிங் பட்டதாரி) என்பவர் அங்கு வந்தார். அவரை கண்டதும் சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கிகொண்டிருந்த 6 பேரும் தங்களை காப்பாற்றுமாறு கூறி சத்தம் போட்டனர். உடனே ஸ்ரீதர் ஏரியில் இறங்கி தண்ணீரில் நீந்தி சென்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 5 பெண்கள் உள்ளிட்ட 6 பேர்கை-யும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். 6 பேர் உயிரை காப்பாற்றிய ஸ்ரீதரை கிராம மக்கள் பாராட்டினர்.

மேலும் செய்திகள்