கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் நவீன எந்திரங்கள் மூலம் அதிக வேகத்தில் மின்கம்பங்கள் நடும்பணி

தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் நவீன எந்திரங்கள் மூலம் அதிகவேகத்தில் மின்கம்பங்கள் நடும் பணியை கலெக்டர் அண்ணாதுரை பார்வையிடார்.;

Update:2018-12-04 04:30 IST
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கலெக்டர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டார். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம், பாய்ச்சூர் கிராமத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர் களையும், தைல மரங்களையும் அவர் பார்வையிட்டார். பின்னர் உப்புண்டார்பட்டி வேளார்தெருவில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நெற்கதிர்கள் மற்றும் சேதமடைந்த மின் கம்பங்களையும், தெக்கூர் கிராமத்தில் கஜா புயலால் சேதமடைந்த சவுக்கு மரங்களையும் அவர் பார்வையிட்டார்.

அதனை தொடர்ந்து, திருவோணம் ஊராட்சி ஒன்றியம், அக்கரை வட்டத்தில் கஜா புயலால் சாய்ந்த மின் கம்பங்களுக்கு பதிலாக நவீன எந்திரம் மூலம் துளையிட்டு புதிய மின் கம்பங்களை அதிவேகத்தில் நடும் பணியினை கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டார். தொடர்ந்து, பட்டுக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் கஜா புயல் நிவாரண பணிகள் மற்றும் சீரமைப்பு பணிகள் குறித்து பிற மாவட்டங்களிலிருந்து வந்துள்ள மாவட்ட வருவாய் அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார், பின்னர் பேராவூரணி கிராம நிர்வாக அலுவலகத்தில் கஜா புயல் சேத கணக்கெடுப்பு விவரங்கள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.

பின்னர், பேராவூரணி ஊராட்சி ஒன்றியம், துறவிக்காடு மற்றும் ஒட்டங்காடு ஊராட்சிகளில் கஜா புயலால் சேதமடைந்த தென்னந்தோப்பினை கலெக்டர் அண்ணாதுரை முன்னிலையில் வேளாண்மைத்துறை அரசு முதன்மை செயலாளரும், வேளாண் உற்பத்தி ஆணையருமான ககன்தீப்சிங் பேடி பார்வையிட்டார்.

அப்போது வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குனர் மதியழகன், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் நெடுஞ் செழியன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்