என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கு: நாமக்கல் கோர்ட்டில் யுவராஜ் ஆஜர் 12-ந் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு
என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் நேற்று நாமக்கல் கோர்ட்டில் யுவராஜ் ஆஜரானார். இந்த வழக்கு விசாரணை வருகிற 12-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நாமக்கல்,
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் என்ஜினீயர் கோகுல்ராஜ் (வயது 23). இவர் கொலை செய்யப்பட்டது தொடர்பான சாட்சிகள் விசாரணை நாமக்கல் முதன்மை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இதுவரை கோகுல்ராஜின் தாயார் சித்ரா, சகோதரர் கலைச்செல்வன், கோகுல்ராஜின் தோழி சுவாதி, அவரது தாயார் செல்வி, வக்கீல் பார்த்தீபன் உள்பட 41 பேர் சாட்சியம் அளித்து உள்ளனர்.
இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதி இளவழகன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உள்ள சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்பட 15 பேரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
சேலத்தை சேர்ந்த வக்கீல் பார்த்தீபன் என்பவரிடம் குறுக்கு விசாரணை நடந்தது. யுவராஜ் தரப்பு வக்கீல் கோபாலகிருஷ்ண லட்சுமிராஜூ குறுக்கு விசாரணை நடத்தினார். பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்கிய விசாரணை மதிய உணவு இடைவேளைக்கு பிறகும் தொடர்ந்து நடந்தது. பின்னர் 3.30 மணியளவில் முடிவுற்றது.
இதையடுத்து அந்த வழக்கு விசாரணையை வருகிற 12-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.
அதேபோல் நாமக்கல் முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் யுவராஜ் மீதான நீதிமன்ற அவமதிப்பு விசாரணைக்கு வந்தது. அதை வருகிற 17-ந் தேதிக்கு மாஜிஸ் திரேட்டு தனபால் ஒத்தி வைத்தார்.