தமிழகம் ஓரிரு ஆண்டுகளில்: குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாகும் - ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
தமிழகம் ஓரிரு ஆண்டுகளில் குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாகும் என்று தேனியில் நடந்த விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.;
தேனி,
தேனியை அடுத்துள்ள பழனிசெட்டிபட்டியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் பசுமை வீடுகள் கட்டுவதற்கான உத்தரவு, குடிசை மாற்று வாரியம் சார்பில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான உத்தரவு மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் உழைக்கும் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் ஆகிய நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், தேனி எம்.பி. பார்த்திபன், கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன் ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு நலத்திட்டங்களை வழங்கி பேசினார். 161 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 89 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் பசுமை வீடுகள் கட்டுவதற்கான உத்தரவு, 190 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 99 லட்சம் மதிப்பில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான உத்தரவு, 149 பெண்களுக்கு ரூ.37 லட்சத்து 25 ஆயிரம் மானியத்தில் ஸ்கூட்டர்கள் என மொத்தம் 500 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியே 26 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.
விழாவில் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது கூறியதாவது:-
குடிசையில் வாழும் மக்களுக்கு சொந்த வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்பதற்காக பசுமை வீடுகள் திட்டத்தை ஜெயலலிதா தொடங்கினார். அந்த திட்டத்தின் படி வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு கட்டிக் கொடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், மத்திய அரசின் சார்பிலும் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் குடிசைகளில் வசிக்கும் மக்களுக்கு சொந்த வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகிறது.
தமிழகத்தில் 15 லட்சம் குடிசைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் 5 லட்சம் குடிசைகளுக்கு மாற்றாக புதிய வீடுகள் கட்டும் பணி முன்னேற்றத்தில் உள்ளது. 2023-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடுகள் வழங்க வேண்டும் என்ற இலக்கு உள்ளது. தமிழ்நாட்டில் 2020-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு கட்டிக் கொடுக்கப்படும்.
தேனி மாவட்டத்தில் ஆற்றங்கரை பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களும், நகராட்சி பகுதியில் குடிசைகளில் வசிப்பவர்களும் கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஓரிரு ஆண்டுகளில் தமிழகம் குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாகும். ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து நலத்திட்டங்களும் தற்போதும் தடைபடாமல் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக தேனியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில், 20 ஆயிரத்து 895 மாணவ, மாணவிகளுக்கு ரூ.7 கோடியே 76 லட்சம் மதிப்பில் விலையில்லா சைக்கிள்களை ஓ.பன்னீர்செல்வம் வழங்கி பேசினார்.
விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சையதுகான் மற்றும் அரசு அலுவலர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.