மேகமலை பகுதியில்: யானைகள் பலியாவதை தடுக்க கூடுதல் மின்கோபுரம் - வன அதிகாரிகள் குழு அறிவுறுத்தல்
மேகமலை வனப்பகுதியில் யானைகள் தொடர்ந்து பலியாவதை தடுக்க அந்த வழித்தடத்தில் கூடுதல் மின்கோபுரம் அமைக்க வேண்டும் என்று வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவு குழுவினர் மின்வாரியத்துக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
கம்பம்,
மேகமலை வன உயிரின சரணாலயத்தில் கம்பம் கிழக்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட வென்னியாறு பகுதியில் உயர் அழுத்த மின்கம்பிகள், மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டு சுருளியாறு மின்நிலையத்திலிருந்து மின்சாரம் கொண்டு செல்லப்படுகின்றன. காட்டுயானைகள் செல்லும் வழித்தடத்தில் மின்கம்பிகள் அமைந்துள்ளன. இந்த இடத்தில் பாறைகளும், மண் மேடாகவும் இருப்பதால் அந்த வழியாக காட்டுயானைகள் கடந்து செல்லும் போது மின்கம்பி உரசி மின்சாரம் பாய்ந்து இறந்து வருகின்றன.
இந்த பகுதியில் வனத்துறை மற்றும் மின்வாரியத்துறையினர் ஆய்வு நடத்தினர். அப்போது மேடான பகுதியை சீரமைக்க மின்வாரியத்துறையினர் முடிவு செய்தனர். இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் பாறைகளை வெடி வைத்து உடைத்து அகற்றுவதற்கு வனத்துறையினரிடம் அனுமதி கோரப்பட்டது. இதனால் சீரமைப்பு பணிகளை மின்வாரியத்துறையினர் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியில் மின்சாரம் பாய்ந்து 2 காட்டுயானைகள் பலியாகின. யானைகள் பலியாவதை தடுக்க வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் நேற்று முன்தினம் வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவு வன பாதுகாவலர் உமா தலைமையில் அதிகாரிகள் குழுவினர் மேகமலை வென்னியாறு பகுதியில் மின்சாரம் பாய்ந்து யானைகள் இறந்த இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது மின்வாரியத்துறை அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
ஆய்வு செய்த வன உயிரின குற்றத்தடுப்பு அதிகாரிகளிடம் கேட்டபோது, கயத்தாறுக்கு சுருளியாறு மின்திட்டத்தில் இருந்து செல்லும் மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. அந்த பகுதியில் உள்ள பாறைகளை வெடி வைத்து அகற்றுவது வனப்பகுதியில் சாத்தியமில்லை. எனவே தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயர்த்துவதற்கு கூடுதலாக மின்கோபுரம் அமைத்தால் மட்டுமே நிரந்தர தீர்வு காண முடியும். மேலும் இதற்கான அறிக்கையை தயார் செய்து ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என்றனர்.
இதுகுறித்து மின்வாரியத்துறையினரிடம் கேட்டபோது, மேடான பகுதியில் உள்ள பாறைகளை வெடி வைத்து அகற்றுவதற்கு வனத்துறை அனுமதி தரவில்லை. அப்படி இருக்கையில் கூடுதல் மின்கோபுரம் அமைக்கவேண்டும் என்றாலும், அதற்கு சிமெண்டு கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும். அப்போது பாறையை உடைத்து எடுத்தால் மட்டுமே தளம் அமைக்க சமப்படுத்த முடியும். இதற்கு வனத்துறை அனுமதி கிடைக்குமா? என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக மின்வாரிய உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அறிக்கை மற்றும் திட்டம் தாக்கல் செய்யப்படும். மேலும் யானைகள் பலியான சம்பவத்துக்குபின், சுருளியாறு மின் திட்டத்தில் பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றனர்.