கோவையில்: பன்றிக்காய்ச்சலுக்கு பெண் உள்பட 3 பேர் பலி
கோவையில் பன்றிக்காய்ச்சலுக்கு பெண் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
கோவை,
கோவை போத்தனூர் அருகே உள்ள பாரதிநகரை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 65). இவர் கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக கடந்த மாதம் 11-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பல்வேறு சோதனைகளை மேற்கொண்ட டாக்டர்கள் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பதை அறிந்தனர். இதையடுத்து அவரை சிறப்பு வார்டில் வைத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை பரிதாபமாக இறந்தார்.
இதேபோல் நீலாம்பூர் அண்ணாநகரை சேர்ந்தவர் பழனிசாமி (61). இவர் கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடந்த பரிசோதனையில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 30-ந் தேதி பழனிசாமி மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப் பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார்.
கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர் பெரியக்கா (51). இவர் கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சலால் அவதியடைந்து வந்தார். இதற்காக அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரின் ரத்தம் மற்றும் சளியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பதை அறிந்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் தற்போது பன்றிக்காய்ச்சலுக்கு 34 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 3 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 51 பேரும் என மொத்தம் 88 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை டாக்டர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.