ரஜினி படத்தில் பணிபுரிந்த கிராபிக்ஸ் கலைஞரின் கார் 60 அடி ஆழ கிணற்றில் பாய்ந்தது

ரஜினி நடித்த 2.0 படத்தில் பணிபுரிந்த கிராபிக்ஸ் கலைஞர் குடும்பத்துடன் சென்றபோது 60 அடி ஆழ கிணற்றுக்குள் கார் பாய்ந்தது.

Update: 2018-12-02 23:45 GMT
ஆம்பூர்,

சென்னை ஆவடியில் உள்ள இந்து கல்லூரி பகுதியில் வசித்து வருபவர் சுந்தரமூர்த்தி (வயது 35). இவர் சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்துள்ள 2.0 படத்தில் கிராபிக்ஸ் கலைஞராக பணிபுரிந்துள்ளார். பெங்களூருவில் நடைபெற இருந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் நள்ளிரவு மனைவி மாயா (33), மகள் கீர்த்தி (2) ஆகியோருடன் காரில் புறப்பட்டார். காரை சுந்தரமூர்த்தியே ஓட்டிச்சென்றார்.

கார் வேலூரை கடந்து நேற்று அதிகாலை 4 மணியளவில் ஆம்பூர் அருகே மின்னூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையை விட்டு இறங்கி, அருகில் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதன் பிறகும் நிற்காத கார் 60 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் பாய்ந்தது. அதிகாலை நேரம் பனிப்பொழிவின் காரணமாக சாலையில் செல்லும் வாகனங்களுக்கு விபத்து நடந்தது குறித்து எதுவும் தகவல் தெரியவில்லை.

காருடன் கிணற்றுக்குள் 3 பேரும் சிக்கிகொண்டு என்னசெய்வது என்று தெரியாமல் தத்தளித்தனர். பின்னர் சுதாரித்து கொண்ட சுந்தரமூர்த்தி தனது செல்போன் மூலம் 108 ஆம்புலன்சுக்கு ஏரி பகுதியில் உள்ள கிணற்றுக்குள் சிக்கிக் கொண்டதாக தகவல் தெரிவித்தார்.

108 ஆம்புலன்ஸ் மின்னூர் பகுதிக்கு விரைந்து வந்தது. அங்குள்ள ஏரி, சாலையோர பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரமாக ஊழியர்கள் தேடினர். ஆனால் விபத்து நடந்ததற்கான எந்தவித அறிகுறியும் தெரியவில்லை.

இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் உள்ளிட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை நடத்தி கார் பாய்ந்த கிணற்றை கண்டறிந்தனர்.

உடனடியாக ஒரு கயிற்றை கட்டி போலீசார் உள்ளே இறங்கினர். அப்போது காருக்குள் 3 பேரும் சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டு இருப்பது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து போலீசார் காருக்குள் இருந்து ஒருவர் பின் ஒருவராக 3 பேரையும் அதிகாலை 5.30 மணியளவில் மீட்டனர். 3 பேருக்கும் 108 ஆம்புலன்சில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் மேல்சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கார், கிணற்றின் ஓரம் இருந்த மரத்தில் மோதிய பின் கிணற்றுக்குள் பாய்ந்துள்ளது. இதன் காரணமாக காரின் வேகம் குறைந்துள்ளது. இல்லையெனில் கிணற்றுக்குள் உள்ள சகதியில் கார் மூழ்கி இருக்கும். அதிர்ஷ்டவசமாக 3 பேரும் காயத்துடன் உயிர் தப்பினர். காருடன் கிணற்றுக்குள் சிக்கினாலும் தைரியமாக சுந்தரமூர்த்தி 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்த காரணத்தால் 3 பேரையும் உயிருடன் காப்பாற்ற முடிந்தது.

இதையடுத்து கிணற்றுக்குள் விழுந்த காரை போலீசார் மீட்டனர். அப்போது ஒரு பாம்பும் போலீசாரின் கயிற்றில் சிக்கியது. அந்த பாம்பு புதருக்குள் விடப்பட்டது.

இந்த விபத்து தொடர்பாக ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாலாஜா அருகே சாலையோர கிணற்றில் ஆட்டோ விழுந்ததில் 5 பேர் பலியாகினர். இதையடுத்து சாலையோர கிணறுகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி பல இடங்களில் கிணறுகள் மூடப்பட்டன.

இருந்தபோதிலும் சில இடங்களில் சாலையோர கிணறுகள் மூடப்படாமலும், கிணற்றின் சுவர் இல்லாமலும் உள்ளது. எனவே, இனிமேலாவது சாலையோர கிணறுகளை மூட வேண்டும் அல்லது கிணற்றை சுற்றி சுவர் எழுப்ப வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்