புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் காலவரையற்ற வேலை நிறுத்தம் - நாளை முதல் தொடங்குகிறது
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் காலவரையற்ற வேலை நிறுத்ததத்தை தொடங்குகின்றனர்.
நெல்லை,
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கமான ஜாக்டோ-ஜியோ நெல்லை மாவட்ட உயர் மட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நெல்லையில் நேற்று மாலை நடந்தது. ஒருங்கிணைப்பாளர்கள் பால்ராஜ், பார்த்தசாரதி ஆகியோர் தலைமை தாங்கினர். உயர்மட்ட குழு உறுப்பினர் குமாரவேல் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். 21 மாத ஊதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும்.
பல்வேறு காலக்கட்டங்களில் சேர்ந்த தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பணிக்காலத்தை அவர்கள், பணியில் இருந்து சேர்ந்த நாள் முதல் கணக்கிட வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது.
போராட்டத்தின் அடுத்த கட்டமாக நாளை (செவ்வாய்கிழமை) முதல் திட்டமிட்டபடி காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்குவது. முதல்நாளில் நெல்லை மாவடத்தில் உள்ள 19 ஒன்றியங்களிலும் காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்துவது.
வருகிற 5-ந் தேதி 16 தாலுகா அலுவலம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது. அதன் பிறகும் அரசு கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் வருகிற 7-ந் தேதி மாவட்ட அளவில் மறியல் போராட்டம் நடத்துவது.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் துரைசிங், பெரியதுரை, ராஜ்குமார், துரை பாக்கியநாதன், முத்துச்சாமி, பன்னீர் செல்வம், சுப்பு, வீரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.