காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.400 கோடியில் கதவணை; அதிகாரிகள் விரைவில் ஆய்வு அமைச்சர் தகவல்

காவிரி ஆற்றின் குறுக்கே புகளூரில் ரூ.400 கோடியில் கதவணை கட்ட அதிகாரிகள் விரைவில் ஆய்வு செய்ய உள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

Update: 2018-12-02 23:00 GMT
நொய்யல்,

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி கோம்புபாளையம், திருக்காடுதுறை, என்.புகளூர் ஊராட்சிகளின் பூத்கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடையனூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கரூர் அ.தி.மு.க.ஒன்றிய செயலாளர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர்கள் வடிவேல், குமரன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

புகளூரில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.400 கோடி செலவில் கதவணை கட்டுவதற்கான ஆய்வுகளை அதிகாரிகள் விரைவில் மேற்கொள்ள உள்ளனர். தமிழக அரசு சார்பில் படித்த மாணவ, மாணவிகளுக்கு திருமண உதவித்தொகை மற்றும் தங்க நாணயம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல் பொதுமக்களுக்கு தமிழக அரசின் விலையில்லா திட்டத்தின் மூலம் பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இவற்றை எல்லாம் பொது மக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரிக்கவேண்டும். அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க.வை எதிர்த்து நிற்பவர்களை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். பூத்கமிட்டி நிர்வாகிகள் விழிப்புடன் செயல்பட்டு வாக்காளர்களிடம் வாக்கு சேகரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் நொய்யல் அருகே குறுக்குச்சாலை வேட்டமங்கலம் ஊராட்சியில் பூத்கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடந்தது. இதில் அந்த ஊராட்சி பகுதிகளை சேர்ந்த பூத்கமிட்டி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்