விவசாய நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு: அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
அறச்சலூர் அருகே விவசாய நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அறச்சலூர்,
ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள வடுகப்பட்டி மற்றும் கொங்குடையாம்பாளையம் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்க மின்வாரிய அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று காலை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி புகழேந்தி மற்றும் அதிகாரிகள் அறச்சலூர் அருகே பாமகவுண்டன்வலசு பகுதிக்கு வந்தனர். பிறகு அவர்கள் அனைவரும் உயர்மின் கோபுரம் அமைப்பதற்காக அந்தப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் அளவீடு செய்து கொண்டு இருந்தனர்.
இதுகுறித்த தகவல் அந்தப்பகுதியில் வேகமாக பரவியது. இதனால் அப்பகுதி மக்கள் அங்கு விரைந்து சென்று நிலத்தை அளவீடு செய்து கொண்டு இருந்த அதிகாரிகளை முற்றுகையிட்டனர். மேலும் விவசாய நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்ததோடு, கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அறச்சலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் போலீசார், அதிகாரிகளை முற்றுகையிட்டவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் கூறுகையில், ‘விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்க நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.
தற்போது கோபுரம் அமைக்க நிலங்களில் அளவீடு செய்ய அதிகாரிகள் வந்து உள்ளனர். இதுகுறித்து எந்தவித தகவலும் எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. மேலும், உயர்மின் கோபுரம் அறச்சலூரில் உள்ள ஈஸ்வரன் கோவில் பகுதி வழியாக கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் கோவில் சேதமடையும். எனவே உயர்மின் கோபுரம் அமைக்கக்கூடாது. மேலும், விவசாய நிலம் அளவீடு செய்யும் பணியை நிறுத்த வேண்டும்’ என்றும் கூறினார்கள்.
அதற்கு போலீசார் மாவட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்கள். ஆனால் பொதுமக்கள் இதனை ஏற்றுக்கொள்ளாமல் அளவீடு செய்யும் பணியை நிறுத்த வேண்டும் என்று கூறி, அளவீடு செய்யும் விவசாய நிலங்களில் படுத்து கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதைத்தொடர்ந்து நிலங்களில் படுத்திருந்த ஆண்களையும், பெண்களையும் போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி அங்கிருந்து கொண்டு சென்றனர். மேலும் அங்கு திரண்டிருந்த பொதுமக்களையும் போலீசார் அப்புறப்படுத்தினார்கள். அதைத்தொடர்ந்து நேற்று மாலை 6 மணி வரை விவசாய நிலங்களில் அளவீடு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.