எழும்பூர் ரெயில் நிலையத்தில் விவசாயிகள் போராட்டம் கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆதரவு

டெல்லியில் இருந்து தமிழகம் வந்தபோது சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

Update: 2018-12-02 23:00 GMT
சென்னை,

சென்னையில் இருந்து கடந்த மாதம் (நவம்பர்) 27-ந் தேதி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக் கண்ணு தலைமையிலான தமிழக விவசாயிகள் டெல்லி நோக்கி சென்றனர். பின்னர் அங்கு நடந்த விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டு ரெயில் மூலம் நேற்று சென்னை சென்டிரல் வந்தனர்.

இந்த நிலையில் திடீரென விவசாயிகள் விவசாய கடனை தள்ளுபடி செய்யக்கோரி சென்டிரல் ரெயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து டி.எஸ்.பி. ரவி உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் தாமஸ் ஜேசுதாசன் தலைமையிலான போலீசார் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து விவசாயிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் வந்தடைந்தனர். பின்னர் அங்கும் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் எழும்பூர் ரெயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து தனது ஆதரவை கூறினார். இதையடுத்து விவசாயிகள் தங்களை நேரில் வந்து சந்தித்தற்கு நன்றி கூறினர். இதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நாடு தழுவிய விவசாயிகளின் கோரிக்கை தாங்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு நியாயமான விலை. இந்த கோரிக்கை அரசால் செய்யக்கூடிய ஒன்றாகும். மக்கள் நீதி மய்யம் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. கஜா புயலால் பதிக்கப்பட்ட பகுதிகளை சென்று பார்வையிட்டேன். புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் பல கிராமங்களுக்கு நிவாரணங்கள் சேரவில்லை.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த மாவட்டங்களில் விவசாயிகளுக்கு உள்ள கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை வைகை ரெயில் மூலம் போலீசார் அனுப்பிவைத்தனர்.

மேலும் செய்திகள்