பள்ளி விடுதிகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் பணியாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

பள்ளி விடுதிகளில் காலிப்பணியிடங்களை தமிழக அரசு நிரப்ப வேண்டும் என்று பள்ளி விடுதி பணியாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2018-12-02 22:45 GMT
பெரம்பலூர்,

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளி விடுதி பணியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் பெரம்பலூரில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ராஜாங்கம், பொருளாளர் தங்கமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் செயல்பாடுகளை விளக்கி நிறுவன தலைவர் தங்கவேல் பேசினார்.

தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளி விடுதிகளில் காலிப்பணியிடங்களான சமையலர், காவலர், துப்புரவு பணியாளர்களை அரசு நிரப்ப வேண்டும். குறைந்த பட்சம் ஒரு விடுதிக்கு 2 சமையலர் நியமனம் செய்ய வேண்டும்.

காலமுறை ஊதியம்

விடுதி மாணவர்களின் நலன் கருதி காவலர் இல்லாத விடுதிகளுக்கு இரவு நேர காவலர் நியமனம் செய்ய வேண்டும். பணியில் இருக்கும் போது இறக்கும் பணியாளர் களின் வாரிசுதாரர்களுக்கு, அவர்களின் கல்வி தகுதிக்கேற்ப பணி வழங்க வேண்டும். விடுதி காவலர்களுக்கு ஆண்டிற்கு ஈட்டிய விடுப்பு 30 நாட்கள் வழங்க வேண்டும். துப்புரவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பல மாவட்டங்களில் காலியாக உள்ள துப்புரவு பணியிடங்களை அரசு நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் சங்க ஆலோசகர் மணிமாறன், மாநில துணைத் தலைவர்கள் மாதேஷ், பெரியசாமி, மலையாளன், சுப்ரமணியன், நடராஜன் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் தூத்துக்குடி மாவட்ட தலைவர் பொன்னழகன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்