ஓடுதள பாதையில் சென்ற விமானத்தில் திடீர் கோளாறு விமானியின் சாமர்த்தியத்தால் 150 பயணிகள் உயிர் தப்பினர்

திருச்சியில் ஓடுதள பாதையில் சென்ற விமானத்தில் திடீரென்று கோளாறு ஏற்பட்டது. விமானியின் சாமர்த்தியத்தால் 150 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Update: 2018-12-02 23:00 GMT
திருச்சி,

திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு தனியார் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் தினமும் இரவு 12.35 மணிக்கு திருச்சி வந்து, பின்னர் 1.50 மணிக்கு சிங்கப்பூர் புறப்பட்டு செல்லும். நேற்று முன்தினம் நள்ளிரவு வழக்கம்போல் அந்த விமானம் திருச்சி வந்தது. விமானத்தில் செல்வதற்காக 150 பயணிகள் காத்து இருந்தனர். விமான நிலையத்தில் பயணிகளுக்கான சோதனை முடிந்தபிறகு, அவர்கள் விமானத்தில் ஏறி அமர்ந்தனர். விமானம் புறப்பட்டு செல்ல விமானநிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து விமானம் ஏரோபிரிட்ஜ் பகுதியில் இருந்து புறப்பட்டு ஓடுதள பாதை நோக்கி மெதுவாக நகர்ந்தது. ஓடுதள பாதையில் சிறிது தூரம் சென்றபோது, விமானத்தின் என்ஜின் பகுதியில் திடீரென்று கோளாறு ஏற்பட்டது தெரியவந்தது. உடனே விமானி இது குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

இதனால் கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானத்தை தொடர்ந்து இயக்க வேண்டாம் என்றும், மீண்டும் ஏரோ பிரிட்ஜ் பகுதிக்கு கொண்டு வரும்படியும் விமானிக்கு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தின் வேகத்தை படிப்படியாக குறைத்தார். பின்னர் மீண்டும் அந்த விமானத்தை ஏரோ பிரிட்ஜ் பகுதிக்கு கொண்டு வந்து நிறுத்தினார். விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் உடனடியாக கீழே இறக்கப்பட்டனர்.

விமான நிலையத்தில் இருந்த பொறியாளர் குழுவினர் அங்கு சென்று விமானத்தின் என்ஜின் பகுதியில் சோதனை செய்தனர். அப்போது என்ஜினில் கோளாறு ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் பழுதை சீரமைப்பதற்கு தேவையான உபகரணங்கள் சிங்கப்பூரில் இருந்து வர வேண்டும் என்பதால் உடனடியாக பழுதை சரி செய்ய முடியவில்லை. இதனால் விமானம் திருச்சியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.

இதற்கிடையே விமானத்தில் இருந்து இறக்கப்பட்ட பயணிகள் அனைவரும் தனியார் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். மாற்று விமானத்தில் அவர்களை சிங்கப்பூருக்கு அனுப்ப ஏற்பாடு நடந்து வருகிறது. இந்த நிலையில் சில பயணிகள் விமான பயணத்தை ரத்து செய்துவிட்டு புறப்பட்டு விட்டனர். விமானம் மேலே பறக்க இருந்த நிலையில் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு விமானியின் சாமர்த் தியத்தால் 150 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் விமான நிலைய பகுதியில் பரபரப்பை ஏற் படுத்தியது.

மேலும் செய்திகள்