கஜா புயல் காரணமாக மீன்பிடிக்க செல்லாததால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

கஜா புயல் காரணமாக மீன்பிடிக்க மீனவர்கள் செல்லாததால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் புயலில் சேதமடைந்த படகுகளுக்கு கூடுதலாக நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-12-02 22:45 GMT
நாகப்பட்டினம்,

கஜா புயல் கோரதாண்டவத்தால் நாகை மாவட்டம் பேரழிவை சந்தித்துள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு மரங்கள், மின்கம்பங்கள், குடிசை வீடுகள் உளிட்டவை சேதமடைந்துள்ளதால் மக்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். குறிப்பாக மீனவர்களின் வாழ்வாதாரமான விசைப்படகுகள், பைபர் படகுகள், கட்டுமரங்கள், மீன்பிடி வலைகள் உள்ளிட்டவைகள் சூறைக்காற்றில் சிக்கி சின்னாபின்னமாகின. காற்றில் தூக்கி வீசப்பட்ட படகுகள் மலை போல் குவிந்து கிடப்பதாலும், சவுக்கு காட்டுக்குள் வீசப்பட்டதாலும் அதனை மீட்க முடியாமல் மீனவர்கள் தவித்து வருகின்றனர்.

ஒரு சில இடங்களில் மீன்வளத்துறை மூலம் படகுகளை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றன. மீனவர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு படகுளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கஜா புயல் காரணமாக கடந்த 11-ந்தேதியில் இருந்து நாகை மாவட்டத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மேலும் புயலில் சேதமடைந்த படகுளை சீரமைக்க பொருளாதார வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக நிவாரணம்

இதுகுறித்து இந்திய தேசிய மீனவர் சங்க தலைவர் ராஜேந்திர நாட்டார் கூறுகையில்:-

கஜா புயல் ஏற்படுத்திய கோரதாண்டவத்தில் நாகை மாவட்டத்தில் விசைப்படகுகள், பைபர் படகுகள், கட்டுமரங்கள் மற்றும் பல லட்சம் மதிப்புள்ள வலைகள் பெரும் சேதமடைந்துள்ளன.

சேதமடைந்த படகுகளுக்கு அரசு அறிவித்த நிவாரண தொகை போதுமானதாக இல்லை. புயலால் முழுமையாக சேதமடைந்த விசைப்படகுக்கு ரூ. 60 லட்சமும், பகுதி சேதமடைந்த விசைப்படகுக்கு ரூ. 30 லட்சமும், முழுமையாக சேதடைந்த பைபர் படகுக்கு ரூ.1½ லட்சமும், பகுதி சேதமடைந்த படகுக்கு ரூ. 75 ஆயிரமும் வழங்கவேண்டும்.

புயலினால் தென்னை, மா விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அரசு அறிவித்ததை விட கூடுதலாக நிவாரணம் வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் நாளை (இன்று) மதியம் தலைமை செயலகத்தில், மீன்வளத்துறை அமைச்சரையும், முதல்-அமைச்சரையும் சந்திக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்