‘தேஜஸ்’ ரெயில் வரப்பிரசாதமாக அமையுமா? மதுரை பயணிகள் எதிர்பார்ப்பு

அதிநவீன வசதிகளை கொண்ட ‘தேஜஸ்’ எக்ஸ்பிரஸ் ரெயில் வரப்பிரசாதமாக அமைய வேண்டும் என்று மதுரை பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2018-12-01 23:00 GMT
மதுரை,

இந்திய ரெயில்வேயில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ‘தேஜஸ்‘ ரெயில் இயக்கப்படும் என்று கடந்த 2016-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தேஜஸ் ரெயில் தயாரிக்கப்பட்டு மும்பையில் இருந்து கோவா மாநிலம் கர்மாலிக்கு கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் முதன்முதலாக இயக்கப்பட்டது.

பிறகு, புதுடெல்லி-சண்டிகர் இடையே இயக்கப்பட்டது. இந்த ரெயிலில் நவீன பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட வசதிகள் பல உள்ளன.

இருக்கைகள் வெளிநாடுகளில் உள்ள ரெயில்களின் இருக்கை போல வடிவமைக்கப்பட்டு உள்ளன. அதிவேக வை-பை இன்டர்நெட் வசதி, பயோ-கழிப்பறைகள், கண்காணிப்பு கேமரா, தீ மற்றும் புகை எச்சரிக்கை அலாரம், கழுவிய கைகளை உலர வைக்க கருவி, பார்வையற்றவர்களும் எளிதில் அறியக்கூடிய வகையில் பிரெய்லி தொடுதிரை, ஒவ்வொரு இருக்கையிலும் விமானத்தில் இருப்பது போல எல்.இ.டி. டி.வி. வசதி, ஹெட்போன் வசதி என பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. இந்த ரெயிலை மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் கூட இயக்கமுடியும்.

இருந்தாலும் தற்போது மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் முதன்முறையாக சென்னை-மதுரை இடையே தேஜஸ் ரெயில் இயக்கப்படும் என்ற அறிவிப்பு மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அதனால் இந்த ரெயில் எப்போது ஓடத்தொடங்கும் என்ற எதிர்பார்ப்பும் பயணிகளிடையே ஏற்பட்டுள்ளது.

மதுரை-சென்னை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னையில் இருந்து காலையிலும், மதுரையில் இருந்து மதியமும் புறப்படும் என தெரிகிறது. இந்த ரெயில் மதுரையில் இருந்து மதியம் புறப்பட்டு நள்ளிரவில் சென்னையை சென்றடையும் என்று கூறப்படுகிறது.

இதற்கான சோதனை ஓட்டம் முடிந்துள்ள நிலையில், ஒரு வாரத்திற்குள் சிறப்பு ரெயிலாக இயக்கப்படும் என்று தெரிகிறது. முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த ரெயிலில் சேர்கார் இருக்கை பெட்டிகள்-12, எக்சிகியூடிவ் பெட்டிகள்-2 இணைக்கப்பட்டிருக்கும். சேர்கார் பெட்டிகளில் 72 இருக்கைகளும், எக்சிகியூடிவ் பெட்டிகளில் 56 இருக்கைகளும் உள்ளன.

மதுரை-சென்னை தேஜஸ் எக்ஸ்பிரஸ் வாரத்திற்கு 5 நாட்கள் இயக்கப்படும் என தெரிகிறது. குறைந்தபட்ச கட்டணமாக ரூ.785, அதிகபட்ச கட்டணமாக ரூ.1,515 வசூலிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ரெயிலில் உள்ள வசதிகளை முறையாக பயன்படுத்த வேண்டிய பொறுப்பு பயணிகளுக்கு உள்ளது.

மும்பை-கோவா இடையே இயக்கப்படும் தேஜஸ் ரெயிலின் பெட்டிகளில் எல்.இ.டி.திரை சேதப்படுத்தப்பட்டும், ஹெட்போன்கள் விஷமிகளால் எடுத்து செல்லப்பட்டதால், அந்த ரெயில் பொலிவை இழந்து வருகிறது. எனவே, பயணிகள் அதிக பொறுப்புணர்வுடன் பயணிக்க வேண்டும் என்று தென்னக ரெயில்வே தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ரெயில் கட்டணம் சமானிய பயணிகளுக்கு ஏற்ப இல்லை என்று ஒரு கருத்து நிலவினாலும், நவீன வசதிகளுடன் தென்தமிழகத்துக்கு ஒரு ரெயில் ஓடப்போகிறது என்பது வரவேற்கக்கூடியதாகும். எனவே இந்த ரெயில் பயணிகளுக்கு வரப்பிரசாதமாக அமைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.

மேலும் செய்திகள்