சத்தியமங்கலம் அருகே ரோட்டில் நடமாடிய சிறுத்தைகள்; வாலிபர் மோட்டார்சைக்கிளை போட்டுவிட்டு ஓட்டம்

சத்தியமங்கலம் அருகே ரோட்டில் சிறுத்தைகள் நடமாடியதை பார்த்து அந்த வழியாக சென்ற வாலிபர் மோட்டார்சைக்கிளை கீழே போட்டுவிட்டு ஓடினார்.

Update: 2018-12-01 22:45 GMT

டி.என்.பாளையம்,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், ஆசனூர், தலமலை, கேர்மாளம், தாளவாடி, டி.என்.பாளையம், பவானிசாகர் என 7 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு ஏராளமான சிறுத்தை, புலி, யானை, காட்டெருமை, மான், செந்நாய் போன்ற விலங்குகள் உள்ளன.

இந்தநிலையில் சத்தியமங்கலம் வனச்சரகத்துக்கு உட்பட்ட கொண்டப்பநாயக்கன்பாளையம் அருகே உள்ள பளிஞ்சூர் பாசக்குட்டையை சேர்ந்தவர் நவீன் (வயது 26). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்றுவிட்டு, மாலை 6 மணி அளவில் மோட்டார்சைக்கிளில் புளியங்கோம்பை செல்லும் ரோட்டில் வீட்டுக்கு வந்துகொண்டு இந்தார்.

பாசக்குட்டை அருகே அவர் சென்றபோது, சற்று தூரத்தில் ஒரு பெரிய சிறுத்தையும், ஒரு சிறிய சிறுத்தையும் ரோட்டில் நின்றுகொண்டு இருந்தன. இதை கவனித்த நவீன் அலறியபடி மோட்டார்சைக்கிளை பிரேக் போட்டு நிறுத்தினார்.

பின்னர் வண்டியை ரோட்டிலேயே போட்டுவிட்டு வந்த திசையிலேயே ஓடிச்சென்று, ஒரு மரத்தின் பின்னால் மறைந்து நின்றுகொண்டார். சிறிது நேரத்தில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் 2 பேர் வந்தார்கள். அவர்களை தடுத்து நிறுத்தி நவீன் விசயத்தை கூறினார். அவர்களும் பயந்துகொண்டு அங்கேயே நின்றனர்.

சிறிது சேரம் கழித்து 3 பேரும் சேர்ந்து மெதுவாக ரோட்டில் கிடக்கும் மோட்டார்சைக்கிளை கடந்து சென்று பார்த்தார்கள். அப்போது அங்கு சிறுத்தைகள் இல்லை. காட்டுக்குள் சென்றுவிட்டன. இதனால் நிம்மதி அடைந்த நவீன் தன்னுடைய மோட்டார்சைக்கிளை எடுத்துக்கொண்டார். பிறகு 3 பேரும் வீட்டுக்கு சென்றுவிட்டார்கள்.

இந்த தகவல் அந்த பகுதி மக்களிடையே பரவியது. இதனால் பீதியடைந்துள்ள அவர்கள் புளியங்கோம்பை ரோட்டில் பயந்தபடி சென்றுவருகிறார்கள்.

மேலும் செய்திகள்