ஊட்டியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தபடி மலைரெயிலை கண்டு ரசிக்க நடவடிக்கை
ஊட்டியில் படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள் ஊட்டி மலை ரெயிலை கண்டு ரசிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி,
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ஊட்டி ஏரியில் படகு இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள். இங்கு நுழைவு கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.13 வசூலிக்கப்படுகிறது. கேமரா கட்டணமாக ரூ.25, வீடியோ கேமரா கட்டணமாக ரூ.150 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சுற்றுலா பயணிகளுக்காக மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகு இயக்கப்பட்டு வருகிறது.
மிதி படகில் சவாரி செய்ய 2 இருக்கைகளுக்கு ரூ.380, 4 இருக்கைகளுக்கு ரூ.580, துடுப்பு படகில் 4 இருக்கைகளுக்கு ரூ.660, 6 இருக்கைகளுக்கு ரூ.780, மோட்டார் படகில் 8 இருக்கைகளுக்கு ரூ.570, 10 இருக்கைகளுக்கு ரூ.700, 15 இருக்கைகளுக்கு ரூ.1,020 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. ஊட்டி படகு இல்லத்தில் சீசன், பண்டிகை காலங்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.
ஊட்டி ஏரியை சுற்றிலும் அடர்ந்து வளர்ந்த உயரமான மரங்கள் காணப்படுகிறது. அவை பசுமையாக காட்சி அளிப்பதால், சுற்றுலா பயணிகள் மனதுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் நடுவே படகு சவாரி செய்வதை சுற்றுலா பயணிகள் விரும்புகிறார்கள். ஏரியின் கரையோரத்தில் மான் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் கடமான்கள் தங்களது குட்டிகளுடன் மேய்ச்சலில் ஈடுபட்டு வருகின்றன. இதனை சவாரி மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கிறார்கள்.
இதற்கிடையே ஊட்டி ஏரியின் கரையோரத்தில் ரெயில்வே தண்டவாளம் செல்கிறது. இந்த வழியாக தினமும் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. ரெயில்வே தண்டவாளத்தை சுற்றி கரையோரத்தில் புதர் செடிகள் ஆக்கிரமித்து வளர்ந்து இருந்தன. இதனால் படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள் மலை ரெயிலை கண்டு ரசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ரெயில்வே நிர்வாகம் புதர் செடிகளை அகற்ற முடிவு செய்தது.
தற்போது புதர் செடிகள் அகற்றப்பட்டு, ஊட்டி மலை ரெயில் மெதுவாக ஊர்ந்து செல்வதை ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்தபடியே சுற்றுலா பயணிகள் மற்றும் அவர்களது குழந்தைகள் கண்டு ரசிக்கின்றனர். அதே போல் மலை ரெயிலில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் மரங்களுக்கு நடுவே தெரியும் ஊட்டி ஏரியை பார்த்து மகிழ்கின்றனர். இந்த நடவடிக்கைக்கு சுற்றுலா பயணிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.