மின்வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

மின்வினியோகம் செய்யக்கோரி பேராவூரணி அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அதிகாரிகள் சம்பவ இடத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Update: 2018-12-01 22:45 GMT
பேராவூரணி,

தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் கஜா புயல் காரணமாக கடந்த 16-ந் தேதி முதல் மின்சாரம் துண்டிக்கப் பட்டுள்ளது. 15 நாட்கள் கடந்த நிலையில் இதுவரை பேராவூரணி பகுதிக்கு முறையாக மின்சாரம் வழங்கப்படவில்லை. ஒரு சில பகுதிகளுக்கு மட்டுமே இதுவரை மின்சாரம் வழங்கப்படுகிறது.

குறிப்பாக இரவு 8 மணி முதல் அதிகாலை 6 மணி வரை மட்டும் மின்சாரம் வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும் மின்சாரமும் குறைந்த அழுத்தத்துடன் இருப்பதால் மின்விசிறி, குடிநீர்மோட்டார், மிக்சி, கிரைண்டர் போன்றவற்றை இயக்க முடியவில்லை.

கிராமங்களில் இதைவிட மோசமான நிலை உள்ளது. இதுவரை பெரும்பாலான கிராம ஊராட்சிகளில் மின்சாரம் கிடைக்காமல் பொதுமக்கள் குழந்தை களுடன் தவித்து வருகின்றனர். இரவு நேரங் களில் கொசுக்கடி, காரண மாக காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

வெளிமாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மின்வாரிய ஊழியர்களை வரவழைத்து, உடைந்து விழுந்த மின்கம்பங்களுக்கு பதில் புதிய மின்கம்பம் நட்டும், புதிய மின் மாற்றிகள் அமைத்தும் பணிகள் நடந்து வந்தாலும், தற்போதுள்ள சூழலில் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்க இன்னும் ஒரிரு மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது. இந்தநிலையில் பொன்காடு பகுதியில் உள்ள 3 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் நிரப்ப உடனடியாக மின்சாரம் வழங்க வேண்டும் என கூறி அப்பகுதி மக்கள் பேராவூரணி- ஆவணம் சாலையில், மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மின்வாரிய உதவி செயற் பொறியாளர் ராதாகிருஷ்ணன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனடியாக மின் இணைப்பு வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதன்பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

பட்டுக்கோட்டை நகரில் கஜா புயல் தாக்கி 15 நாட்கள் கடந்த பிறகும் சில பகுதிகளுக்கு மின்சாரம் கிடைக்கவில்லை.

இதை கண்டித்து பட்டுக்கோட்டை- அறந்தாங்கி சாலையில் செட்டியார் காலனி பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலநேத்திரம், போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதன்பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்